காரியாபட்டி அருகே 60 ஆண்டுகளுக்கு பின் மறுகால் பாய்ந்த கண்மாய்: மலர் தூவி நன்றி தெரிவித்த மக்கள்

காரியாபட்டி:  காரியாபட்டி அருகே ஆவியூர் கிராமத்தில் சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பல ஆண்டுகளாக கண்மாய்க்கு தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வந்த மக்கள், திமுக ஆட்சி அமைந்ததும் தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசுவிடம் இப்பகுதி விவசாய பொதுமக்கள் நிலையூர்-கம்பிக்குடி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் அமைச்சர் தங்கம்தென்னரசுவின் உத்தரவின்படி நிலையூர்-கம்பிக்குடி கால்வாய் திட்டம் தூர்வாரப்பட்டு கண்மாய்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

இதில் மாங்குளம், குரண்டி, ஆவியூர், அரசகுளம், கம்பிக்குடி, பாப்பணம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடைகின்றன. அமைச்சர் தங்கம் தென்னரசுவின் உத்தரவுப்படி காரியாபட்டி திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன்,திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் ஆவியூர் சிதம்பரபாரதி, அரசகுளம் சேகர் ஆகியோரின் தீவிர முயற்சியால் கால்வாய் திட்டம் கனரக இயந்திரம் கொண்டு சீரமைப்பு செய்யப்பட்டு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆவியூர் கீழ்மேல் பெரிய கண்மாய்க்கு 60 ஆண்டுகளுக்கு பின்பு  இத்திட்டத்தின் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பெற்று கண்மாய் நிரம்பி மறுகால் வழி தண்ணீர் செல்கிறது.

மறுகால் அடித்துச் செல்லும் தண்ணீர் கம்பிக்குடி பெரிய கண்மாய்க்கு செல்கிறது. கண்மாய் நிரம்பி மறுகால் வரும் தண்ணீரை ஆவியூர் ஒன்றிய கவுன்சிலர் சிதம்பரபாரதி மற்றும் கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மலர்தூவி மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். மேலும் இத்திட்டத்தை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கும்,  தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசுக்கும் இப்பகுதி கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: