10 ஆண்டுக்குபின் பொய்கைக்கரைப்பட்டி தெப்பத்தில் உலா; கள்ளழகர் தெப்பத்திருவிழா கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

அலங்காநல்லூர்: 10 ஆண்டுகளுக்கு பின்பு பொய்கைக்கரைப்பட்டி தெப்பக்குளத்தில் அன்ன வாகனத்தில் கள்ளழகர் உலா வந்தார். மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் மாசி தெப்ப உற்சவ விழா கடந்த 15ம் தேதி கஜேந்திர மோட்சத்துடன் தொடங்கியது. இதைதொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. நேற்று காலை 6.45 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் ஸ்ரீ தேவி பூமிதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாள் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் தெப்பத்திற்கு புறப்பாடாகி சென்றார்.

கடந்த சில ஆண்டுகளாக தெப்பக்குளத்தில் நீர் இல்லாததால் கள்ளழகர் கரையை சுற்றி எழுந்தருளினார். ஆனால் இந்த ஆண்டு தற்போது பெய்த பருவமழை காரணமாகவும், நூபுர கங்கையில் இருந்து வெளியேறும் தீர்த்தம் கொண்டுவரப்பட்டதாலும் தெப்பக்குளம் முழு கொள்ளளவை எட்டி நீர் நிறைந்து காட்சியளிக்கிறது. எனவே இந்த ஆண்டு கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் தெப்பக்குளத்தில் எழுந்தருளினார். முன்னதாக கள்ளழகர் தெப்பக்குளத்தில் எழுந்தருளும் நிகழ்வுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் மிக பிரம்மாண்டமாக அன்னப்பறவை வடிவமைக்கப்பட்டிருந்தது.

பின்னர் பகல் 11.15 மணிக்கு மேல் 12 மணிக்குள் தெப்பத்தின் கிழக்கு புறம் உள்ள மண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுவதும் தெப்பத்திலிருந்தார். மாலை பூஜைகள் முடித்து மீண்டும் தெப்பத்தில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories: