திருவண்ணாமலையில் பரிதாபம் : நாய்கள் கடித்து மான் சாவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள கிரிவலப்பாதையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. இந்த மான்கள் தண்ணீர், உணவு தேடி வெளியே வரும்போது வாகனங்களில் சிக்கியும், நாய்களிடம் கடிபட்டும் இறந்துவிடுகிறது. இன்று அதிகாலை கிரிவலப்பாதையில் உள்ள பச்சையம்மன் கோயில் அருகே வனப்பகுதியில் இருந்து ஒரு மான் வெளியே வந்தது. அப்போது அங்கு சுற்றித்திரிந்த நாய்கள், மானை துரத்திச்சென்று கடித்து குதறியது. நாய்களிடம் இருந்து மான் தப்பி ஓடியது.  ஆனாலும் நாய்கள் விடாமல் துரத்திச்சென்று கடித்ததால் மான் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அங்கு வந்து மானை மீட்டு வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் மான்கள் அங்குள்ள சாலை வழியாக வருகிறது. இவ்வாறு வரும்போது வாகனங்களில் சிக்கி இறக்கின்றன. மேலும் ஊருக்குள் வந்தால் நாய்களிடம் சிக்கி இறந்துவிடுகின்றன. எனவே மான்கள் வனப்பகுதியில் இருந்து வெளியேறுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: