பேரணாம்பட்டு அடுத்த கொண்டம்பல்லி கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள கிணற்றை அகற்ற வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

பேரணாம்பட்டு : பேரணாம்பட்டு அடுத்த கொண்டம்பல்லி கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள கிணற்றை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேரணாம்பட்டு வட்டம், கொண்டம்பல்லி கிராமத்தில் விவசாய நிலமாக இருந்த இடம், தற்போது வீட்டு மனைகளாக மாற்றப்பட்டதால், கொண்டம்பல்லி குட்டை கிராமமாக உள்ளது. மேலும், விவசாய நிலங்களாக இருந்தபோது அப்பகுதியில் இருந்த கிணறு வீட்டு மனையாக மாற்றப்பட்டும் அகற்றப்படாமல் ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கிறது. மேலும் கிணறு அருகே அரசு ஆரம்பப்பள்ளியும், அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது.

இதனால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் குழந்தைகளை அப்பகுதியில் அனுப்புவதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர்.  மேலும், இந்த கிணறு பேரணாம்பட்டிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளதால், அப்பகுதியினர் ஆபத்தான நிலையில் உள்ள கிணற்றை அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலை துறை, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோரிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுநாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி கொண்டம்பல்லி கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள கிணற்றை விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: