பாளை அண்ணா நகரில் புதர்மண்டி காணப்படும் ஸ்மார்ட் சிட்டி பஸ்நிறுத்தம்

நெல்லை :  நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாளை அண்ணாநகரில் அமைக்கப்பட்டுள்ள பஸ்நிறுத்தம் புதர்மண்டி காணப்படுகிறது. இங்கு பஸ்கள் நிறுத்தப்படாத நிலை தொடர்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாளை வேய்ந்தான்குளம் புதிய பஸ்நிலையம், சந்திப்பு பஸ்நிலையம், பொருட்காட்சி திடலில் வணிகவளாகம், நேரு சிறுவர் கலையரங்கம், டவுன் போஸ் மார்க்கெட், வஉசி விளையாட்டு அரங்கம் ஆகியவை  ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் பாளை பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை மாநகரில் உள்ள முக்கிய சாலைகளான பாளை ஐகிரவுண்ட் சாலை, வடக்கு-தெற்கு புறவழிச்சாலை, கொக்கிரகுளம்-குறிச்சி சாலை, டவுன் உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பஸ்நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிறுத்தங்களில் அரசு, தனியார் பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை. அதற்கு முன்பாகவே பஸ்கள் நிறுத்தப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

பாளை ஐகிரவுண்ட் அண்ணாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்ட பஸ் நிறுத்தம் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் விஷஜந்துக்களின் நடமாட்டம் அச்சத்தால் அங்கு பயணிகள் யாரும் நிற்பதில்லை. மாநகர பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி பஸ் நிறுத்தங்களில் அரசு, தனியார் பஸ்கள் முறையாக நிறுத்தப்படுவதில்லை. மேலும் வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் போக்குவரத்து சிக்னல் அருகே அமைக்கப்பட்டுள்ள பஸ்நிறுத்தத்தில் புதிய பஸ்நிலையத்தில் இருந்து நெல்லை சந்திப்புக்கு வரும் பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை. அதற்கு முன்பாக சிக்னல் பகுதியில் பஸ்கள் திரும்பும் பகுதியில் நிறுத்தப்படுகின்றன. இதனால் அம்பை சாலையில் இருந்து வண்ணார்பேட்டைக்கு வரும் வாகனங்கள் திருப்பத்தில் திணறிவருகின்றன.

புதிய பஸ்நிலையத்தில் இருந்து நெல்லை சந்திப்பு, டவுன் பகுதிக்கு வரும் பஸ்கள் வண்ணார்பேட்டை வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகின்றன.நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பஸ்நிறுத்தங்களில் முறையாக மாநகர பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: