அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கிராம கோயில் பூசாரிகளையும் ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும்: ஒரு சரகத்துக்கு 50 பேர் விண்ணப்பம் அனுப்பலாம்; ஆணையர் குமரகுருபரன் அறிவுரை

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாமல் 2 லட்சம் கிராம கோயில்கள் உள்ளன. இவற்றை அந்தெந்த கோயில்களின் பூசாரிகளே பராமரித்து வருகின்றனர். இவர்களின் நலன்கருதி இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து 60 வயதினை கடந்த ஓய்வு பெற்ற பூசாரிகளுக்கு இந்த வாரியத்தின் மூலம் மாத ஓய்வூதியம்  ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரையில் 3,281 பேர் பயனடைந்துள்ளனர். இந்த நிலையில், பூசாரிகளின் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்றும், ஓய்வு பெற்ற பூசாரிகளுக்கு 10 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோயில் பூசாரிகள் நலச்சங்கம் கோரிக்கை வைக்கப்பட்டன. அதன்பேரில், கிராம கோயில் பூசாரிகள் ஓய்வூதியம்  ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து, புதிதாக கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற கிராம கோயில் பூசாரிகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து கோட்ட உதவி ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டின் கீழ் இல்லாத கோயில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதை கடந்த ஓய்வு பெற்ற கிராம கோயில் பூசாரிகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தங்கள் சரகங்களில் வரப்பெற்றுள்ள விண்ணப்பங்களை முறையாக பரிசீலித்து உரிய இணைப்புகளுடன் முன்மொழிவினை இவ்வலுவலகத்திற்கு வரும் 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேலும், ஒவ்வொரு சரகத்தில் இருந்தும் குறைந்தது 50 விண்ணப்பங்களை குறிப்பிட்ட தேதிக்குள் போர்க்கால நடவடிக்கை எடுத்து அனுப்பி வைக்க தெரிவித்து கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: