ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வெவ்வேறு இடங்களில் ஓட்டு: வேட்பாளர்கள் திணறல்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வெவ்வேறு வார்டுகளில் ஓட்டு இருப்பதால் வேட்பாளர்கள் திகைத்தும் திணறியும் வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இதில், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. அதில் ஆண் வாக்ககாளர்கள் 5005, பெண் வாக்காளர்கள் 5465, இதர வாக்காளர் 1 வரும்  என  மொத்தம் 10471 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பொதுவார்டு 6, ஆதிதிராவிடர் பெண் 1, ஆதிதிராவிடர் பொது 1, பெண்கள் மட்டும் 7 என 15 வார்டுகள் உள்ளது. இதில் 12வது வார்டு திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது, ஊத்துக்கோட்டை பேரூராட்சி தேர்தல் களத்தில் திமுக, அதிமுக உட்பட 59 பேர் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 7வது வார்டில் வசிக்கும் அப்பா, அம்மாவுக்கு அதே வார்டிலும், அவரது மகளுக்கு 4வது வார்டிலும் வாக்கு உள்ளது. இதேபோல், 11வது வார்டில் வசிக்கும் பெற்றோருக்கு அதே வார்டிலும்,  அவரது மகனுக்கு  8வது வார்டிலும் வாக்குகள் உள்ளது.

இதனால் வாக்காளர்கள் தங்கள் வாக்கு எப்படி மற்ற வார்டுக்கு சென்றது என திகைத்து போய் உள்ளனர். இவர்களிடம் வாக்கு கேட்க செல்லும் வேட்பாளர்கள் பெற்றோர்களிடம், தங்களுக்கு வாக்கு அளிக்கும் படி கேட்கின்றனர். அதே நேரத்தில், இவர்களது மகன் மற்றும் மகளின் ஓட்டு அடுத்த வார்டில் உள்ளதால் அங்கு நிற்கும் வேட்பாளர் இவர்களின் பிள்ளைகளிடம் வந்து வாக்கு சேகரித்து செல்கின்றனர். இதனால் வேட்பாளர்கள் யாரிடம் வாக்கு சேகரிப்பது என்பதிலும் திணறி வருகின்றனர்.

* வார்டு வரையறையில் குளறுபடி

பெற்றோர்கள் கூறியதாவது,  `எங்களுக்கு வாக்கு ஒரு வார்டிலும், எங்களது பிள்ளைகளுக்கு வாக்கு வேறு வார்டிலும் உள்ளது. மேலும், பேரூராட்சியில் வார்டு வரையறை செய்யும்போது அதையும் முறையாக செய்யவில்லை.  அதிலும், குளறுபடி உள்ளது, இனி வரும் தேர்தலிலாவது முறையாக வாக்காளர்களை சேர்க்க வேண்டும்’ என கோரிக்கை வைத்து கூறினர்.

Related Stories: