மாணவர்கள், அலுவலகம் செல்வோர் நலன்கருதி திருச்சி- மயிலாடுதுறை பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்: திருச்சி கோட்ட மேலாளருக்கு கோரிக்கை

தஞ்சை: திருச்சி - மயிலாடுதுறை இடையே, பள்ளி, கல்லூரி மாணவர்களும், அரசு அலுலகங்களில் பணிபுரிவோரும் பயணம் செய்யும் வகையில் பயணிகள் ரயிலை காலை, மாலை நேரத்தில் இயக்க வேண்டும் என தஞ்சாவூர் - திருச்சி ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அச்சங்கத்தின் செயலாளர் ஜீவக்குமார், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா ஊரடங்குக்கு முன்பு இயக்கப்பட்ட திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண்-56824) காலை நேரத்திலும், அதே போல் மயிலாடுதுறை- திருச்சி ரயில் (வண்டி எண் 56825) மாலை நேரத்திலும் இயக்கப்பட்டதன் மூலம், நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு, தனியார் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்லும் ஆயிரக்கணக்கானோர் இந்த ரயிலில் திருச்சியில் தொடங்கி, பூதலூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை வழியாக மயிலாடுதுறை வரை பயணம் செய்தனர்.

கொரோனா ஊரடங்கின்போது இந்த ரயில்கள் நிறுத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கு தளர்வின்போது, பல பயணிகள் ரயில்கள் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வரும் போது, இந்த இரு ரயில்கள் மட்டும் இதுவரை இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் நாள்தோறும் கூடுதல் தொகையையும், நேரத்தையும் செலவிட்டு, பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டியிருப்பதால், பொருளாதார ரீதியாக ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே போல், ரயில்களில் முன்பிருந்த மாதாந்திர சீசன் கட்டணத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு ஜீவக்குமார் மனு அனுப்பியுள்ளார்.

Related Stories: