புதுக்கோட்டை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி மாடுபிடி வீரர் பலி-50 பேர் காயம்

இலுப்பூர் : புதுகை அடுத்த இலுப்பூர் அருகே கோயில் திருவிழாவையொட்டி நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் ஒருவர் பலியானார். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்

தனர்.புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை அருகே திருநல்லூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை ஜல்லிக்கட்டு நடந்தது. ஜல்லிக்கட்டு போட்டியை டிஆர்ஓ., செல்வி, இலுப்பூர் ஆர்டிஓ., தண்டாயுதபாணி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 800க்கும் மேற்பட்ட காளைகள் மருத்துவ குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டு, போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டன. ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்றன. அவற்றை 250 மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கினர். இதில் சில காளைகள், மாடுபிடி வீரர்களை பக்கத்தில் நெருங்கக்கூட விடவில்லை.

சில காளைகள் தன்னை பிடிக்க வந்த மாடுபிடி வீரர்களை தூக்கி வீசி பந்தாடின. சில காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.

இந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் இனாம்குளத்தூர் அருகே உள்ள கீழப்பட்டியை சேர்ந்த பாண்டிமுருகன் (19) என்பவர் உயிரிழந்தார். மேலும் ஜல்லிக்கட்டில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தில் தயார்நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக இலுப்பூர், விராலிமலை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போட்டியில் அதிகமாக காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Related Stories: