உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை விமர்சித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: புகார் கொடுத்தவர் பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நீதிபதிகள் நியமனத்தை விமர்சித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர எடுக்கப்படும் நடவடிக்கைகளை எதிர்த்த மனுவுக்கு புகார்தாரர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020 ஜனவரி 14ம் தேதி துக்ளக் பத்திரிகையின் 51வது ஆண்டு விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசியல்வாதிகளால் நியமிக்கப்பட்டவர்கள். யார் மூலமாவது யார் காலையோ பிடித்து தான் நீதிபதிகளாக வந்துள்ளனர் என்று பேசினார்.

இதையடுத்து குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி  வழக்கறிஞர் எஸ்.துரைசாமி அளித்த மனுவை அப்போதைய அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் நிராகரித்துவிட்டார்.

இந்த நிலையில், ஆட்சி மாற்றத்துக்கு முந்தைய உத்தரவை ரத்து செய்து குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டுமென்று புதிய அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரத்திடம் வழக்கறிஞர் துரைசாமி மீண்டும் கோரிக்கை வைத்தார். இதை பரிசீலித்த அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் முந்தைய அட்வகேட் ஜெனரல் நிராகரித்த உத்தரவை ரத்து செய்து புகார் மீது மீண்டும் விசாரணை நடைமுறையை தொடங்கினார்.

இந்நிலையில் தனக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி மறுத்த உத்தரவை திரும்பப் பெற்றதை எதிர்த்து குருமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு, நீதிபதி அனிதாசுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. புகார்தாரர் சார்பில் வழக்கறிஞர் வி.இளங்கோவன் ஆஜராகி, புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதிட்டார். குருமூர்த்தி தரப்பில், ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்ட விண்ணப்பம் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

புகார்தாரர் துரைசாமி திமுகவுக்கு ஆதரவானவர் என்பதால் முந்தைய  உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு எதிரான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டுமென்று வாதிடப்பட்டது.  இதையடுத்து, குருமூர்த்தி மனுவுக்கு பதிலளிக்கும்படி, வழக்கறிஞர் எஸ்.துரைசாமிக்கு  உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிப்ரவரி 24ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதுவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் மனு மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டார்.

Related Stories: