செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்; பல ஆயிரம் நெல்மூட்டைகள் தேக்கம், விவசாயிகள் பாதிப்பு: ரூ1 கோடி இழப்பு

செஞ்சி: செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கூலி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பல ஆயிரம் நெல்மூட்டைகள் தேங்கி உள்ளன. ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அரசு தீர்வு காண அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாள்தோறும் 10,000 முதல் 15,000 வரை நெல்  மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றுவதற்கு கூலி தொகையை உயர்த்தி தர வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் வியாபாரிகள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் கூலி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் செஞ்சி சுற்றுவட்டப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் தேங்கி உள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். ெதாடர்ந்து செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வியாபாரிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. கடந்த ஒரு வாரமாக கூலித் தொழிலாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாள்தோறும் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வந்த நிலையில் அவற்றை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

 ஆகவே இந்த பிரச்னையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளுக்கு 1 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் கடன் வாங்கி பயிர் செய்த நெற்பயிர்கள் சிறுதானியங்களும் விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். விற்பனை செய்த பணத்தை கொண்டுதான் அடுத்த பயிரிடுவதற்கான செலவினங்களை செய்ய முடியும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர். எனவே அரசு இப்பிரச்னையில் உடனடி தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: