கல்வானில் கொடியேற்றியதாக சீனா பொய் கூறியது ஆதாரத்துடன் அம்பலம்

புதுடெல்லி: கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் நடந்த இடத்தில் கொடியேற்றியதாக சீனா பொய் கூறியது ஆதாரத்துடன் அம்பலமாகி உள்ளது.கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினர் ஊடுருவி இந்திய நிலப்பகுதியை ஆக்கிரமிக்க முயற்சித்தனர். இதனால், இந்தியா, சீன படைகள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு இருநாட்டு ராணுவமும் குவிக்கப்பட்டு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதன்பின், கடந்த 1ம் தேதி புத்தாண்டை ஒட்டி சீன ராணுவம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில், மோதல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் அவர்களின் நாட்டு கொடியை ஏற்றி, தேசிய கீதம் பாடுவது இடம் பெற்றிருந்தது. இதனால், கல்வான் பகுதி சீன கட்டுப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் பரவின. இதை இந்திய ராணுவம் மறுத்தது. அதே சமயம் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினர் தேசியக் கொடி ஏற்றி புகைப்படம், வீடியோவை வெளியிட்டனர்.

இந்நிலையில், கல்வானில் கொடியேற்றியதாக சீன ராணுவம் பொய் கூறியது தற்போது ஆதாரத்துடன் அம்பலமாகி உள்ளது. உளவுத்தகவல்கள் மற்றும் செயற்கைகோள் புகைப்படங்கள் அடிப்படையில் டேமியன் சைமன் என்பவர் டிவிட்டரில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் சீனா கொடியேற்றும் முழு வீடியோவை பதிவிட்ட அவர், அந்த இடம் மோதல் நடந்த இடத்தில் இருந்து சுமார் 1 கிமீ தள்ளி இருப்பதாக கூறி உள்ளார். சீன வீரர்கள் கொடியேற்றும் இடத்தின் அருகில் அவர்கள் புதிதாக கட்டிய பாலம் இருப்பதை குறிப்பிட்டுள்ளார். சில மலை வளைவுப்பகுதிகளையும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதி அமைப்பையும் சுட்டிக்காட்டி உள்ளார். இதன் மூலம் கல்வான் பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

Related Stories: