நெல்லை, தென்காசியில் பிரசாரம் உச்சநீதிமன்ற தீர்ப்பால்தான் நீட் தேர்வை அமல்படுத்தினோம்: எடப்பாடி பழனிசாமி புதுவிளக்கம்

நெல்லை: உச்சநீதிமன்ற தீர்ப்பால்தான் நீட் தேர்வை நாங்கள் செயல்படுத்தினோம் என்று நெல்லையில் நடந்த உள்ளாட்சி தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நெல்லை, தென்காசி மாவட்ட அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பாளை கேடிசி நகரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது எப்போதும் அதிமுகவின் நிலைப்பாடு. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாகவே நாங்கள் அதை செயல்படுத்தினோம். நீட் தேர்வை ரத்து செய்ய நாம் சட்டரீதியாக போராடி தீர்வு காண வேண்டும். மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெற உதவி செய்தோம். மக்களோடு நாம் நெருக்கமாக இருக்க வேண்டும் என்றால் உள்ளாட்சி தேர்தல் வெற்றி நமக்கு அவசியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

* சிவகாசியில் மாவட்ட செயலாளர், எம்எல்ஏ புறக்கணிப்பு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் மற்றும் வாக்குச்சேகரிப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்தார். வேட்பாளர்களை அறிமுகம் செய்து எடப்பாடி பழனிசாமி பேசினார். கூட்டத்தில், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். அத்துடன் அவரது ஆதரவாளர்களும் கலந்துகொள்ளவில்லை. இது அதிமுக மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. எம்எல்ஏ வரவில்லை: திருவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுக. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மான்ராஜ். மாவட்டத்தில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்எல்ஏ இவர்தான். அதிமுக பெண் நிர்வாகியிடம் ஆபாசமாக பேசிய புகாரில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் தலைமறைவாக உள்ளார். எனவே அவரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

Related Stories: