கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்டுமானம் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டதா?: மத்திய தொல்லியல்துறை, தமிழக அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டதா? என்று விளக்கம் அளிக்க மத்திய தொல்லியல்துறைக்கும், தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழிஸ்வரர் கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. யூனஸ்க்கோவால் புராதான சின்னமாக அறிவிக்கப்பட்ட இக்கோயிலில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர் பாலகுரு என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

கோயிலில் தொல்லியல்துறை சார்பில் 3 கோடி ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பதை மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாக்கப்பட்ட கோயிலில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள சட்டப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் அனுமதி இல்லாமல் கட்டுமானங்கள் மேற்கொள்வது குற்றம் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, கட்டுமானங்கள் புராதான சின்னத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன? கட்டுமானங்களுக்கு அனுமதி பெறப்பட்டதா? என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய தொல்லியல்துறைக்கும், தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளது.

Related Stories: