வேலூர் மாநகராட்சி பகுதிகளுக்கு ஒரு வாரத்தில் காவிரி கூட்டு குடிநீர் வினியோகம்: குடியாத்தம் நகருக்கு 2 நாளில் கிடைக்கும்

வேலூர்: காவிரி கூட்டுக்குடிநீர் பைப் லைன் பழுது பார்ப்பு பணிகள் நிறைவடையும் நிலையில் ஒரு வார காலத்தில் வேலூர் நகர மக்களுக்கு காவிரி குடிநீர் கிடைக்கும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு நவம்பரில் பெய்த கனமழையின் காரணமாக பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்த வெள்ளத்தில் பாலாற்றுப்படுகையில் புதைக்கப்பட்டிருந்த காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான பைப் லைன்கள் அடித்து செல்லப்பட்டன. இதனால் காவிரி குடிநீரை நம்பியிருந்த திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.இதையடுத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பைப் லைன் சேதங்களை சீரமைக்கும் பணியில் இறங்கியது. இதில் மாதனூர் அருகே சுமார் 500 மீட்டர் நீளத்துக்கு பைப் லைன் முழுமையாக ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் அங்கு மட்டும் மாதக்கணக்கில் பணி நீடித்தது. இப்பணி சமீபத்தில் நிறைவடைந்து தற்போது செதுவாலை வரை பைப் லைன் சீரமைப்பு பணிகள் முடிந்துள்ளன. இதனால் குடியாத்தம் நகருக்கு அடுத்த 2 நாட்களில் காவிரி குடிநீர் வினியோகம் நடக்கும் என்று தெரிகிறது.

இதையடுத்து ஆங்காங்கே உள்ள சிறிய சேதங்களை சரி செய்யும் பணியில் குடிநீர் வடிகால் வாரிய தொழில்நுட்ப குழுவினர் இறங்கினர். இதில் வேலூர் பிரதான பைப் லைனில் இருந்து காட்பாடி பகுதிக்கு காவிரி நீரை கொண்டு செல்லும் பைப் லைன் சீரமைக்கும் பணிகள் நேற்று போர்க்கால அடிப்படையில் நடந்து முடிந்துள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘செதுவாலை வரை காவிரி கூட்டுக்குடிநீர் பைப் லைன் சீரமைக்கும் பணி முடிந்துள்ளது. இதனால் குடியாத்தத்துக்கு 2 நாட்களில் காவிரி குடிநீர் கிடைக்கும். செதுவாலை வரை பிரதான பைப் லைன் பழுது சீரமைக்கப்பட்டுள்ளது.நேற்று பொய்கையில் பைப் லைன் பற்ற வைக்கும் பணி நடந்துள்ளது. தற்போது காட்பாடிக்கு காவிரி நீரை கொண்டு செல்லும் பைப் லைன் பழுது சரிபார்க்கும் பணி நடந்துள்ளது. ஏறக்குறைய 90 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில் ஒரு வார காலத்தில் வேலூர் நகர மக்களுக்கு காவிரி நீர் வினியோகம் நடக்க வாய்ப்புள்ளது’ என்றனர்.

Related Stories: