காஞ்சியில் வேட்புமனு பரிசீலனையின்போது கணவரை அனுமதிக்ககோரி பாஜ வேட்பாளர் வாக்குவாதம்: டிஎஸ்பியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு முதன்முறையாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. மொத்தம் 51 வார்டுகளில் போட்டியிட வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 229 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.இதைதொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு பரிசீலனை நேற்று தொடங்கியது. இதையொட்டி, நுழைவாயிலில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தேர்தல் விதிகளின்படி வேட்புமனு பரிசீலனையில் பங்கேற்க வேட்பாளர் அல்லது வேட்பாளரை முன்மொழிந்தவர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 19வது வார்டில் பாஜ சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கோமதி ஜெகதீசன், தனது கணவரும், முன்மொழிந்தவரும் பாஜ பிரமுகருமான ஜெகதீசனுடன் வேட்புமனு பரிசீலனையில் பங்கேற்க சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார், வேட்பாளரை மட்டுமே அனுமதிக்க முடியும் என கூறி அவரது கணவர் ஜெகதீசனை தடுத்து நிறுத்தி, ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், தன்னை ஒருமையில் பேசிய டிஎஸ்பி ஜூலியஸ் சீசரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பானது.மேலும் பாஜ பிரமுகரை ஒருமையில் பேசிய டிஎஸ்பியை கண்டித்து பாஜவினர் கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: