ஜாதியை இழிவுபடுத்தி பேசிய வழக்கில் நடிகை முன்முன் தத்தாவுக்கு இடைக்கால முன்ஜாமீன்: பஞ்சாப் - அரியானா ஐகோர்ட் உத்தரவு

மும்பை: குறிப்பிட்ட பிரிவினரின் ஜாதியை இழிவுபடுத்தி பேசிய விவகாரத்தில் நடிகை முன்முன் தத்தாவுக்கு இடைக்கால முன் ஜாமீனை பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் வழங்கி உள்ளது. பிரபல ஹிந்தி ‘டிவி’ தொடர் நடிகை முன்முன் தத்தா கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், குறிப்பிட்ட ஜாதியை இழிவுபடுத்தும் வகையில் அவர் பேசியதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்ததால், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சிலர் பல மாநில போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதற்காக முன்முன் தத்தா மன்னிப்பு கோரிய நிலையில், அவர் மீது எஸ்சி-எஸ்டி சட்டப் பிரிவின்படி முன்முன் தத்தா மற்றும் அவரது அக்கா பபிதாவுக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருவரையும் கைது செய்ய போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், அவர்கள் முன்ஜாமீன் கேட்டு பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி அவ்னீஷ் ஜிங்கன் தலைமையிலான பெஞ்ச், முன்முன் தத்தாவுக்கு நேற்று இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது. அடுத்த ஏழு நாட்களுக்குள் போலீஸ் முன் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்கமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இவ்விவகாரத்தில் அரசு தரப்பில் பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. முன்னதாக ஹிசார் எஸ்சி - எஸ்டி சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம், கடந்த வாரம் முன்முன் தத்தாவின் முன்ஜாமீன் கோரிக்கையை நிராகரித்தது. அதன்பிறகு உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல் முறையீட்டு மனுவை முன்முன் தத்தா தாக்கல் செய்தார் என்பது குறிப்படத்தக்கது.

Related Stories: