திருவாரூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அகரகண்டம் நல்லூரை சேர்ந்தவர் சிவக்குமார்(25). இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் பல்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் மாப்பிள்ளை பிடிக்காததால் அந்த பெண் வீட்டை விட்டு ஓடிவிட்டார். இதனால் பெண்ணின் தங்கையான அப்போது 7ம் வகுப்பு படித்த சிறுமியை(12 வயது) சிவக்குமாருக்கு ெபற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணமான 3 நாட்களிலேயே சிறுமி வீட்டை விட்டு திருவாரூர் அருகே ஒரு கிராமத்தில் உள்ள சித்தி வீட்டுக்கு ஓடிவந்துவிட்டார்.
இதையடுத்து சித்தி ஏற்பாட்டில் சிறுமி வேதாரண்யம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தங்கி படித்து வருகிறார். அவருடன் சித்தி மகளும் படித்து வருகிறார். தற்போது சிறுமி 12ம் வகுப்பும், சித்தி மகள் 11ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.இந்நிலையில் சிவக்குமார், திருவாரூருக்கு வந்து சிறுமியை தன்னுடன் வாழ வரும்படி தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்தார். இதனால் சிறுமி மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று சிறுமி குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து குடித்துவிட்டு பாதி குளிர்பானத்தை வைத்துவிட்டார். இதைபார்த்த அவரது சித்தி மகளும் குளிர்பானம் என நினைத்து மீதி இருந்த விஷத்தை குடித்துவிட்டார்.
வீட்டில் மயங்கி கிடந்த இருவரையும் உறவினர்கள் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிறுமி திருவாரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதில் தனக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததுடன், தற்போது அவருடன் சேர்ந்து வாழும்படி வற்புறுத்தியதால் விஷம் குடித்ததாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிவக்குமார் மீதும், அவரது மாமா ஏழுமலை மற்றும் சிறுமியின் தந்தை மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.