விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜை

*திருக்கைலாய பரம்பரை தருமை ஆதீனம்

* 27வது குருமகா சந்நிதானம் தொடங்கி வைத்தார்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்திப்பெற்ற விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கடந்த 20 ஆண்டுகள் கழித்து வரும் 6ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

திருப்பணிக் கமிட்டி குழு தலைவர் ஜெயின் ஜுவல்லரி அகர்சந்த் தலைமையிலான குழுவினர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னிலையில் திருப்பணிகள் தீவிரமாக நடந்து முடிந்த நிலையில், தற்போது கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கடந்த 27ம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 81 ஹோம குண்டங்கள், 9 நவ அக்னி ஹோம குண்டங்கள், 2 பஞ்சா அக்னி ஹோம குண்டங்கள், 35 ஏகா அக்னி குண்டங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு யாகசாலைக்கான பூர்வாங்க பூஜைகள் நடந்து வருகிறது. வரும் 6ம் தேதி விமான கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று புனித நீர் கொண்டு வருவதற்காக நேற்றுமுன்தினம் காலை கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் முடிவடைந்தவுடன் சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க கங்கை யமுனா, நதியிலிருந்தும் விருத்தாசலம் மணிமுக்தாற்றின் நதியில் இருந்தும் புனிதநீர் தீர்த்தம் கொண்டு வந்து 8 மாட வீதிகள்  சென்று கோவிலுக்குள்ளே தீர்த்தம் கொண்டு செல்லப்பட்டது.

தொடர்ந்து நேற்று காலையில் இருந்து பரிவார கலசங்களுக்கு கலாகர்ஷணம், பஞ்சமூர்த்தி பூஜைகளும், மாலையில் முதல் கால பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

 1300 கலசங்கள் வைத்து அலங்கரிக்கப்பட்டு யாகங்கள் வளர்க்கப்பட்டது. யாகசாலை பூஜையை தருமபுரம் ஆதினம் 27-வது குருமகா சந்நிதானம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

6ம் தேதி 6ம் கால பூஜையுடன் யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கடம் புறப்பாடு நடைபெற்று சரியாக 8.15 மணிக்கு கோபுரங்கள், விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், 8.30 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டி குழு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: