அதிமுக ஆட்சியில் நகை, பயிர்க்கடன் வழங்கியதில் முறைகேடு கூட்டுறவு கடன் சங்க காசாளர் சஸ்பெண்ட்: மண்டல இணைப் பதிவாளர் உத்தரவு; தண்டராம்பட்டு அருகே பரபரப்பு

தண்டராம்பட்டு: அதிமுக ஆட்சியின்போது தண்டராம்பட்டு அருகே வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடாக நகை மற்றும் பயிர்க்கடன் வழங்கியது தொடர்பாக, காசாளரை சஸ்பெண்ட் செய்து, கூட்டுறவு கடன் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தென்கரும்பலூர் ஊராட்சியில் எச்எச்- 124 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் 3,800 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது இந்த கூட்டுறவு சங்கம் மூலம் பலருக்கு பயிர்க்கடன், நகைக்கடன், சுயஉதவிக்குழு கடன் போன்றவை வழங்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசு உத்தரவின்படி, இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் 636 நபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுகவை சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவர், செயலாளர் மற்றும் ஊழியர்கள் கடந்த ஆட்சியின்போது இறந்தவர்கள், வெளிமாவட்டத்தில் வசிக்கும் நபர்களின் போலியான ஆவணங்களை வைத்து நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் மகளிர் குழுவினர் கடந்த 28ம் தேதி கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, இந்த புகார் குறித்து திருவண்ணாமலை கூட்டுறவு கடன் சங்கங்களின் துணைப் பதிவாளர் வசந்தலட்சுமி விசாரணை நடத்தினார். அதில், கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கூட்டுறவு கடன் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ராஜ்குமார் பரிந்துரையின்பேரில் துணைப் பதிவாளர் வசந்தலட்சுமி, தென்கரும்பலூர் வேளாண் கூட்டுறவு கடன் சங்க காசாளர் வீராசாமியை சஸ்பெண்ட் செய்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

Related Stories: