அரசு பஸ்சை 2 முறை தாக்கியது கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் மீண்டும் ஒற்றை யானை உலா-பயணிகள், தொழிலாளர்கள் பீதி

கோத்தகிரி :  கோத்தகிரி-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் ஒற்றை காட்டு யானை உலா வந்தது. இதனால் பயணிகளும், தொழிலாளர்களும் பீதியடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடி, காட்டு மாடு, சிறுத்தை,காட்டு யானை உள்ளிட்ட விலங்குகள் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு, தேயிலை தோட்டங்கள், சாலைகளில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. அண்மைக்காலமாக கோத்தகிரி அடுத்துள்ள கீழ்தட்டப்பள்ளம், முள்ளூர், மாமரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டு உள்ளது.

தேயிலை தோட்டங்களில் வேலைக்கு செல்லும் பணியாளர்கள், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒற்றை காட்டு யானை சாலை மற்றும் தேயிலை தோட்டங்களில் பகல் நேரங்களில் உலா வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே இந்த ஒற்றை காட்டு யானை 2 முறை பகல் மற்றும் இரவு நேரங்களில் அரசு பேருந்தை மறித்து தாக்கியது குறிப்பிடத்தக்கது.

எனவே வனத்துறையினர் சாலை மற்றும் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி முதுமலை போன்ற வனப்பகுதியில் விட வேண்டும் அல்லது அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரங்களில் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு மற்றும் சாலையில் உலா வரும் யானையை விரட்ட வனத்துறையினர் மாமரம், முள்ளூர் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து பணி மேற் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: