பெகாசஸ் மென்பொருள் வாங்கியதை ஒன்றிய அரசு மூடி மறைக்கிறது!: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு..!!

புதுச்சேரி: இஸ்ரேலிடம் இருந்து பெகாசஸ் மென்பொருள் வாங்கியதை ஒன்றிய அரசு மூடி மறைப்பதாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர், விசாரணை எந்தவித பாரபட்சமும் இன்றி நடப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வெளிப்படையான விசாரணைக்கு அவர் உத்தரவிடுவது மட்டுமல்லாமல் பிரதமர், தன்னையும் அந்த விசாரணைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வீடியோவில் பேசியதாவது; இந்தியாவுக்கும் - இஸ்ரேலுக்கும் இடையே பாலஸ்தீன் விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தன.

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 2017ம் ஆண்டு இஸ்ரேல் சென்றார். அப்போது இஸ்ரேல் நாட்டில் இருந்து 2 மில்லியன் டாலர்களுக்கு ஏவுகணைகள் வாங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்திலேயே என்.எஸ்.ஓ. என்ற இஸ்ரேல் நாட்டின் உளவு நிறுவனத்திடம் இருந்து பெகாசஸ் என்ற மென்பொருளையும் இந்தியா பெற்றது. அதற்கு 300 கோடி ரூபாய் இந்திய அரசு அந்த நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது. இவை ஏவுகணைகள் வாங்குகின்ற உடன்படிக்கையில் உள்ளது என்பது தெள்ளத்தெளிவாக உறுதியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் நாட்டோடு ஒப்பந்தம் செய்யும் போது இது செய்யப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது. இதனால் ஒளிவுமறைவில்லாத விசாரணை நடப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி, இந்த விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் வரை தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பிரதமர் மோடியும் தன்னை அந்த விசாரணைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நாராயணசாமி குறிப்பிட்டிருந்தார்.

Related Stories: