ஐகோர்ட் மதுரை கிளையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவிய தமிழக அரசுக்கு நன்றி: பொறுப்பு தலைமை நீதிபதி பேச்சு

மதுரை: ஐகோர்ட் கிளையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் செய்த தமிழக அரசுக்கு நன்றி என்று பொறுப்பு தலைமை நீதிபதி கூறியுள்ளார். ஐகோர்ட் மதுரை கிளையில் கூடுதல் வழக்கறிஞர்கள் அறை, நீதிபதிகள் குடியிருப்பு ஆகியவற்றின் திறப்பு விழாவும், அரசு வழக்கறிஞர் அலுவலக கூடுதல் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நேற்று நடந்தது. ஐகோர்ட் கிளை நிர்வாக நீதிபதி புஷ்பா சத்யநாராயணா வரவேற்றார். ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி திறந்து வைத்தார். நீதிபதிகள் எம்.சுந்தர், பி.புகழேந்தி, அனிதா சுமந்த் ஆகியோர் பேசினர்.

பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி  பேசியதாவது: அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு அடுத்தபடியாக சென்னை உயர்நீதிமன்றமும், அதன் கிளையும் உள்ளன. நெருக்கடியான கொரோனா காலகட்டத்திலும் கூட அதிகப்படியான வழக்குகளை விசாரித்து தீர்வு காணப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களின் சிரமங்களை போக்கிடும் வகையில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மழைக்கால சிரமத்தை கூட போக்கிடும் வகையில் ஐகோர்ட் கிளையில் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

ஐகோர்ட் கிளையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு விரைவாக செய்துள்ளது. இன்னும் தேவையான உதவிகளை செய்து தரும் என நம்புகிறோம். இதற்காக தமிழக அரசிற்கு நன்றி. கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் முறையில் விசாரணை நடந்து வருகிறது. நீதிமன்றங்களில் நேரடி விசாரணை வேண்டுமென வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய கொரோனா காலத்தில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்டோரின் உடல் நலன்தான் மிகவும் முக்கியம். இதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இதற்கு ஏற்றாற்போல காலத்தின் சூழலை கருத்தில் கொண்டு நேரடி விசாரணை குறித்து முடிவெடுக்கப்படும். இதற்காக வழக்கறிஞர்கள் சில காலம் காத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: