கிழக்கு கடற்கரை சாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம்; பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

மாமல்லபுரம்: உத்தண்டியில் இருந்து மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டார். வழிநெடுகிலும் மக்கள், தொண்டர்களை பார்த்து அவர் கையசைத்தார். தமிழக சட்டமன்ற தேர்தலில்  திமுக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.  முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அந்த நேரத்தில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்தது. முதல்வர் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

இதனால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வராக பொறுப்பேற்றது முதல், தினமும் அரசு பணி மற்றும் மக்கள் பணிகளில் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இப்படி பல்வேறு பணி சுமைகளுக்கும் இடையே அவ்வப்போது சைக்கிள் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். இசிஆர் சாலையில் சுமார் 30 முதல் 35 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில், இன்று காலை உத்தண்டியில் இருந்து சைக்கிள் பயிற்சியை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்.

அங்கிருந்து கோவளம், திருவிடந்தை, வட நெம்மேலி, நெம்மேலி, புதிய கல்பாக்கம், சூளேரிக்காடு, பட்டிப்புலம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் அருகே தேவனேரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அவருடன் துப்பாக்கி ஏந்திய போலீசார், பாதுகாப்புக்காக பின்தொடர்ந்து சென்றனர். வழியில் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களை பார்த்து மு.க.ஸ்டாலின் கையசைத்தார். பதிலுக்கு பொதுமக்களும், கட்சி தொண்டர்களும் அவரை பார்த்து உற்சாகமாக கையசைத்தனர். இதை பார்த்த, முதல்வர் மு.க.ஸ்டாலின் உற்சாகமடைந்து சிரித்த முகத்துடன் பயணித்தார். பின்னர் அங்கிருந்து காரில் சென்னைக்கு புறப்பட்டார்.

Related Stories: