கொரோனா பரவல் குறைந்த நிலையில் தமிழகத்தில் வழிபாட்டுதலங்கள் திறப்பு: அனைத்து மதத்தினரும் வரவேற்பு

சென்னை: கொரோனா  பரவல் குறைந்த நிலையில் தமிழகத்தில் வழக்கம்போல் நேற்று கோயில்கள், சர்ச், பள்ளிவாசல்கள்  திறக்கப்பட்டன. இதையடுத்து அதிகாலை முதலே வழிபாட்டு தலங்களில் மக்களின் கூட்டம் அலைமோதியது. வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதால் காலையில் தங்களின் வழிபாட்டு தலங்களுக்கு சென்ற மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை தொடர்ந்து மாநிலத்தில் இரவு நேரம் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் வரும் ஜன.31ம் தேதி வரை  விதிக்கப்பட்டன.

மேலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள்  தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டன. இந்த உத்தரவு கடந்த ஜனவரி  7ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இதன் காரணமாக கோயில்கள்,  பள்ளிவாசல்கள், சர்ச்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில்  கோயில்களில் வழக்கம்போல் அர்ச்சகர் மூலம் பூஜை நடந்தது. சர்ச்சுகளில்  இணையதளம் வழியாக பிரார்த்தனை நடந்தது. பொதுமக்கள்  வீட்டில்  இருந்தபடியே பிரார்த்தனை மற்றும் தொழுகைகளில் ஈடுபட்டனர்.

கடந்த 19ம்  தேதி மீண்டும் வழிபாட்டுதலங்கள் திறக்கப்பட்டன. தொடர்ந்து 21ம் தேதி  முதல் 23ம் தேதி வரை மீண்டும் வழிபாட்டுதலங்கள் மூடப்பட்டன. பின்னர்  24ம் தேதி முதல் பொதுமக்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல  அனுமதிக்கப்பட்டனர். விடுமுறை நாட்களில் மக்கள் கூடுவதை தடுக்கவே இந்த  நடைமுறை பின்பற்றப்பட்டன. இதனால், கடந்த சில நாட்களாக மாநிலத்தில் கொரனோ பரவல்  குறைந்து வருகிறது. இதற்கிடையே, வழிபாட்டுதலங்களில் மீண்டும் பொதுமக்களை  அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையேற்று, வழிபாட்டு தலங்கள் நேற்று முதல் வழக்கம் போல் திறக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்  அறிவித்தார்.

இதன் காரணமாக நேற்று அதிகாலை அனைத்து  கோயில்களும்  திறக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய கோயில்களிலும்  பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, சென்னையில் மயிலாப்பூர்  கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவான்மியூர்  மருந்தீஸ்வரர் கோயில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில்,  திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில்,  சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில், பாரிமுனை காளிகாம்பாள் கோயில்,  மயிலாப்பூர் மாதவபெருமாள் கோயில், கேசவபெருமாள் கோயில் உட்பட அனைத்து  கோயில்களும் அதிகாலையில் திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடந்தன.

எனவே, கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.  கோயில்களில் கொரோனா விதிகளை பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதேபோன்று நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகைகள் நடந்தது. இதில்,  பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்ச்சுகளும் திறக்கப்பட்டன. சிலர் சர்ச்சுக்கு சென்று பிரார்த்தனை செய்தனர்.

Related Stories: