ஏர் இந்தியாவில் டாடாவின் புதிய வரவேற்பு: ‘மகாராஜா… உங்களை வரவேற்கிறது’

புதுடெல்லி: டாடா குழுமத்தின் வசமான ஏர் இந்தியா விமானத்தில் மகாராஜா சின்னத்துடன் பயணிகள் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர். ஏர் இந்தியா விமான நிறுவனம் முதன் முதலில் ரத்தன் டாடாவால் கடந்த 1932ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன்பின் கடந்த 1953ம் ஆண்டு இந்நிறுவனத்தை அப்போதைய ஒன்றிய அரசு நாட்டுடமை ஆக்கியது. சமீபகாலமாக கடும் நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதற்கான ஏலத்தில் டாடா குழுமம் வெற்றி பெற்றது.

இதன் மூலம், 69 ஆண்டுகளுக்குப் பிறகு டாடா மீண்டும் ஏர் இந்தியாவை தனக்கு சொந்தமாக்கி உள்ளது. அனைத்து நடவடிக்கைகளும் முடிக்கப்பட்டு, ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் விமானங்களை டாடா குழுமத்திடம் ஒன்றிய அரசு நேற்று முன்தினம் முறைப்படி ஒப்படைத்தது. இந்நிலையில், ஏர் இந்தியா விமானங்கள் டாடா குழுமத்தின் மூலம் நேற்று இயக்கப்பட தொடங்கியது. ஏர் இந்தியாவில் டாடாவின் ‘மகாராஜா’ சின்னம் இடம் பெற்றது. விமானத்தின் இருக்கைகளில் ‘மகாராஜா’ சின்னம் பிரிண்ட் செய்த மேல்உறைகள் போடப்பட்டிருந்தன.

உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் விமானத்திலும், ‘அன்பார்ந்த விருந்தினர்களே, வரலாற்று சிறப்புமிக்க இந்த விமான நிறுவனத்தின் சேவையில் உங்களை வரவேற்கும் இந்த வேளையில், இன்றைய நாள் ஒரு சிறப்பு நிகழ்வைக் குறிக்கிறது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஏர் இந்தியா அதிகாரப்பூர்வமாக டாடா குழுமத்தின் அங்கமாகி இருக்கிறது. ஏர் இந்தியாவின் எதிர்காலத்திற்கு உங்களை வரவேற்கிறோம்’ என பதிவு செய்யப்பட்ட ஆடியோ உரை மூலம் பயணிகள் வரவேற்கப்பட்டனர்.

சவாலான பரிவர்த்தனை

ஏர் இந்தியா விற்பனை குறித்து ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கூறுகையில், ‘இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க பரிவர்த்தனை. அனைத்து கடன்களும் மிக கவனமாக இரு தரப்புக்கும் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், இருதரப்பும் வெற்றியாளர்களாக உள்ளோம். வணிக ரீதியாக இது ஒரு மிக வித்தியாசமான, சவாலான பரிவர்த்தனை. இன்னும் ஏராளமான சட்ட நடவடிக்கைகள், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் முடிக்க வேண்டி உள்ளது. மிகப்பெரிய அந்த சவாலையும் வெற்றிகரமாக முடிப்போம்,’ என்றார்.

Related Stories: