சென்னை - தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

சென்னை: சென்னையை அடுத்த சிட்லபாக்கத்தில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. சென்னை தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிட்லபாக்கம் பகுதியில் சிட்லபாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அறப்போர் இயக்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஏரியின் வடக்குப்பகுதியில் உள்ள அரசு கட்டிடங்கள், குப்பை கிடங்குகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டது.

ஏரியின் கிழக்கு பகுதியில் சில ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் அகற்றினர். இதுமட்டுமல்லாமல் இந்த ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 453 வீடுகளுக்கு வீடுகளை அகற்ற வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இதேபோல ஏரியின் மேற்கு பகுதியில் உள்ள பெரியார் தெரு பகுதியில் உள்ள வீடுகளை அகற்ற ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் வந்து அளவீடு செய்யும் பணிகளை செய்தனர். அப்போதே பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அந்த ஏரியின் மேற்கு பகுதியில் உள்ள ஏரி ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்றுவதற்காக 2 பொக்லைன் இயந்திரங்களுடன் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக இந்த பகுதிகளில் குவிந்தனர். தாம்பரம் கோட்டாட்சியர் அறிவுடைநம்பி தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறையினர் மற்றும் ஏராளமான அரசு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் இயந்திரங்கள் மீது ஏரி நின்று போராட்டம் நடத்தி, தங்களுக்கு பட்டா நிலங்களில் உள்ள வீடுகளை அகற்ற அதிகாரிகள் முனைவதாகவும், தங்களுடைய கோரிக்கைகள், தங்களிடம் உள்ள பட்டா விவரங்களை ஏற்க அரசு மறுப்பதாகவும் கூறி இந்த 2 பொக்லைன் இயந்திரங்களையும் சிறைபிடித்து தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அந்த வீடுகளை அப்புறப்படுத்தும் பணியானது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் அந்த பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுடைய பட்டா நிலங்களை அகற்ற அரசு முயல்வதாக கூறி போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக வருவாய்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது இந்த பகுதியில் உள்ள கிராம நத்தம் பகுதியில் உள்ள ஏரி ஆக்கிரமிப்பு பகுதிகள் மட்டுமே அகற்றப்படுகிறது. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.தொடர்ந்து போராட்டக்காரர்கள் அதேபகுதியில் குவிந்துள்ளனர். அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Related Stories: