மருத்துவ படிப்பு பொது கலந்தாய்வு இணையவழியில் பதிவு செய்து கல்லூரிகளை தேர்வு செய்வது எப்படி?: வழிகாட்டி வீடியோ வெளியீடு தேர்வுக்குழு செயலாளர் வசந்தாமணி விளக்கம்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு இணைய வழியில் நடைபெறுவதையடுத்து மாணவர்கள் எவ்வாறு இணையவழியே பதிவு செய்து கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என்று மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் வசந்தாமணி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. முதல் நாளான நேற்று முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவினர் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக நடந்தது. தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும் நேரடியாக நடைபெற இருக்கிறது. இதையடுத்து வரும் 30ம் தேதி  தொடங்க இருக்கும் பொதுக் கலந்தாய்வு கொரோனா பரவல் காரணமாக இணையவழியே நடைபெற உள்ளது.

தமிழக வரலாற்றில் முதன்முறையாக மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இணையவழியே நடத்தப்பட இருக்கிறது. அதில் எவ்வாறு பங்கேற்க வேண்டும், எவ்வாறு பதிவு செய்ய வேண்டும், கல்லூரிகளை எவ்வாறு தேர்வு செய்வது உள்ளிட்ட விவரங்களை வீடியோ பதிவாக வெளியிட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த வழிகாட்டி விளக்க வீடியோ பதிவானது நேற்று வெளியிடப்பட்டது. இந்த வீடியோ சுகாதாரத் துறை மற்றும் மருத்துவக் கல்வி இயக்கக இணையதள பக்கங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை தவிர வாட்ஸ் அப், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது.

Related Stories: