நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எஸ்.சி, எஸ்.டிக்கு இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கும், பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பித்த அரசாணையை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியலின, பழங்குயினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி ஜனவரி 17ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக செயலாளர் சத்தியமூர்த்தி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அவர் தாக்கல் செய்த மனுவில், மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் மூன்று மாநகராட்சிகளின் மேயர் பதவிகள், பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பழங்குடியினத்தவர்களுக்கு எந்த இடமும் ஒதுக்கப்படவில்லை. இதேபோல, 138 நகராட்சிகளில் 20 நகராட்சி தலைவர் பதவிகள்  பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.மொத்தமுள்ள 490 பேரூராட்சிகளில் 85 பேரூராட்சிகள் பட்டியலினத்தவர்களுக்கும், 3 இடங்கள் பழங்குடியினத்தவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

எந்த சட்டத்தின் படியும் அல்லாமல், விதிகளின் அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால்  அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். அரசாணையை ரத்து செய்து புதிய அரசாணையை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு  பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தம் ஆஜராகி, 1994ம் ஆண்டு சட்டத்தின்படி மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக தெரிவித்தனர்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 1994ம் ஆண்டு சட்டத்தின் கீழ் மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: