திமுக முன்னாள் அமைச்சர் கவிஞர் கா.வேழவேந்தன் மறைவு; முதல்வர் அஞ்சலி

சென்னை: திமுக மூத்த முன்னோடியும், முன்னாள் அமைச்சருமான கவிஞர் கா.வேழவேந்தன் (86). இவர், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மயிலாப்பூர் ஆர்.கே. சாலையில் உள்ள இல்லத்திலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் 2 பேரும் டாக்டர்கள்.

வேழவேந்தன் 100க்கும் மேற்பட்ட இலக்கியம் மற்றும் கவிதை நூல்களை எழுதியுள்ளார். இதற்காக பல அரசு விருதுகளும், பல்வேறு இலக்கிய அமைப்புகளின் விருதுகளையும் பெற்றுள்ளார். கலைஞரால் அவருக்கு கவிவேந்தர் பட்டம் வழங்கப்பட்டது. 10 ஆண்டுகள் கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரை, கலைஞர் தனது அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக்கினார்.

அதன் தொடர்பாக சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகர் ெஜனிவாவில் நடந்த உலக தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்று தமிழகத்தின் பெருமையை உயர்த்தினார். தற்போது அவர் திமுக தலைமை இலக்கிய அணி புரவலராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த வேழவேந்தன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன், மயிலை த.வேலு எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: