தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அவமதிப்பு: அதிகாரிகளை கைது செய்யக்கோரி ரிசர்வ் வங்கி முற்றுகை போராட்டம்

சென்னை:  தமிழ்தாய் வாழ்த்து பாடலை அவமதித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் பண்ருட்டி தொகுதி எம்எல்ஏவுமான வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்து, ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார்.

அதைதொடர்ந்து ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி முன்பு வடக்கு மண்டல இணை கமிஷனர் ரம்யா பாரதி, பூக்கடை துணை கமிஷனர் மகேஸ்வரன், துறைமுகம் உதவி கமிஷனர் கொடிலிங்கம் தலைமையில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று காலை 11 மணிக்கு வேல்முருகன் தலைமையில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகளை கைது செய்ய கோரி பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக ரிசர்வ் வங்கி நோக்கி சென்றனர்.அனைவரையும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுரங்கப்பாதை அருகே தடுத்து நிறுத்தினர். இருந்தாலும் திட்டமிட்டபடி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு மத்திய அரசுக்கு எதிராகவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்த அதிகாரிகளை கைது செய்ய கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வேல்முருகன் நிருபர்களிடம் பேசியதாவது:தமிழ்த்தாய் வாழ்த்துக்கு கட்டாயம் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நீட் விலக்கு வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் எழுவர் விடுதலைக்கு சட்டம் இயற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. கவர்னர் அதை ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல் காலதாமதம் செய்கிறார். ஆகவே தொடர்ச்சியாக தமிழர்களின் வாழ்வுரிமைக்கும், வேலைவாய்ப்பு உரிமைக்கும் வேட்டு வைக்கின்ற ஒன்றிய அரசு தற்போது தமிழக அரசால் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு வெளியிட்டு இருக்கிற அரசாணைக்கு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒன்றிய அரசின் ரிசர்வ் வங்கியின் ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நாங்கள் எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அதைத்தட்டி கேட்ட தமிழ்நாட்டு பத்திரிகையாளர்களையும் மிரட்டி இருக்கிறார்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப்படுத்திய இவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கட்சியின் சார்பில் புகார் அளித்துள்ளோம். அந்த புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் இந்த அதிகாரிகள் தொடர்ந்து வங்கியில் பணிய செய்ய ஒன்றிய அரசு அனுமதிக்கக்கூடாது. இந்த அதிகாரிகள் பகிரங்கமாக ஊடகம், பத்திரிகை முன்பு தோன்றி மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமானப்படுத்திய அதிகாரிகள் தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள் மூலம் சிறைபிடிக்கப்படுவார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: