தமிழ்த்தாய் வாழ்த்தை ‘ரிசர்வ் வங்கி அதிகாரிகள்’ அவமதித்த விவகாரம்; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்: நடவடிக்கை கோரி கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அதை அவமதிக்கும் வகையில் இருக்கையில் அமர்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரிசர்வ் வங்கி அதிகாரிகள் செயலால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளது. எனவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க முன்னாள் நூலகர் ஜி.ராஜேஷ் புகார் அளித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க முன்னாள் நூலகர் ஜி.ராஜேஷ் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆன்லைனில் சென்னை மாநகர போலீஸ் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியலமைப்பு பிரிவு 51-ஏ(ஏ) சட்டப்படி தேசிய கொடி மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றிற்கு முழு மரியாதை செலுத்தப்பட வேண்டும். அதேபோல் அரசியல் அமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள சரத்தின்படி, மாநில அரசுகளின் ஆணைகளையும் மதிக்க வேண்டும். கடந்த டிசம்பர் 17ம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ‘மாநில பாடலாக’ அறிவித்தார். அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளின் விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் போது, தொடக்கத்தில் கட்டாயமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும்.பதிவு செய்யப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தோ, இசையாகவோ பாடக்கூடாது என்றும், வாய் வழியாக மட்டுமே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில பாடல் பாடும் போது, அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும்.

இந்நிலையில், சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் 73வது குடியரசு தின விழா நிகழ்ச்சியின் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது, அதிகாரிகள் எழுந்து நிற்கவில்லை. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தவறாக எடுத்துக்கொண்டு அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமதிப்பு செய்துள்ளனர். இது அனைத்து ஊடகங்களிலும் தெளிவாக வெளிவந்துள்ளது.

ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் இந்த செயலால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் சூழல் உருவாக வாய்ப்புள்ளது. தமிழக அரசு உத்தரவுக்கு எதிராகவும், மாநில பாடலுக்கு அவமதிப்பு செய்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து முழு விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.இந்த புகாரின் மீது உடனே விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பூக்கடை காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை தொடர்ந்து, ரிசர்வ் வங்கியில் குடியரசு தின விழாவின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள், மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்த போது நேரில் பார்த்த நபர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

அதேநேரம் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்வது குறித்து போலீசார் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அவமதித்த விவகாரம் மாநிலம் முழுவதும் பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: