தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு!: மீனவர்களுக்கு நாளை மட்டும் எச்சரிக்கை..வானிலை மையம் தகவல்..!!

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களுக்கு மேலே நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரியில் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 28ல் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு, இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

ஜனவரி 29 மற்றும் 30ல் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து ஜனவரி 31ல் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்; சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் தென்காசி மாவட்டம் சிவகிரியில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பெரியகுளம் 3 செ.மீ., ஆயிக்குடி, கயத்தாறு, சோத்துப்பாறை, கோடநாடு, ஏற்காட்டில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

நாளை மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு நாளை மட்டும் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: