73வது குடியரசு தின விழாவில் பரபரப்பு ‘தமிழ்த்தாய் வாழ்த்து’க்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காமல் அவமதிப்பு: இருக்கையில் அமர்ந்து வாக்குவாதம் செய்ததால் சர்ச்சை

சென்னை: குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது, இருக்கையில் அமர்ந்து கொண்டு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காமல் அவமதிக்கும் வகையில், கேள்வி கேட்ட நபர்களிடம் ‘எழுந்து நிற்க வேண்டும் என்று கோர்ட் ஆர்டர் கிடையாது’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மத்திய அரசு அலுவலகங்களில் அந்தந்த தலைமை அதிகாரிகள் தேசிய கொடியை ஏற்றி கொண்டாடினர்.

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் செய்து இருந்தனர். பின்னர் ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுவாமி வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றி ஊழியர்களிடம் உரையாற்றினார். அப்போது அதிகாரிகள் அனைவரும் இருக்கையில் அமர்ந்து மண்டல இயக்குநரின் உரையை கேட்டனர். பிறகு நிகழ்ச்சி முடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஒரு சில அதிகாரிகள் மட்டும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று பாடினர். ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பலர் எழுந்து நிற்காமல் அமர்ந்து கொண்டே இருந்தனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்த பிறகு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலர் இருக்கையில் அமர்ந்து இருந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் ‘ஏன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நின்று மறியாதை செய்யவில்லை’  என்று கேட்டனர். அதற்கு அமர்ந்து இருந்த அதிகாரிகள் ‘தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை.... கோர்ட் உத்தரவிட்டுள்ளதா எழுந்து நிற்க வேண்டும் என்று.....’ கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு கேள்வி கேட்ட நபர்கள், “தமிழக அரசு கடந்த டிசம்பர் மாதம் ‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநில பாடலாக அறிவித்து, அந்த பாடலை பாடும் போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்று அரசாணை வெளியிட்டுள்ளது.

நீங்கள் தமிழ் நாட்டில் தானே இருக்கிறீர்கள்.  தமிழக அரசு வெளியிட்ட அரசாணை பற்றி  அரசு உயர் அதிகாரிகளான உங்களுக்கு தெரியாதா? நீங்களே எழுந்து நிற்கவில்லை என்றால் பொதுமக்கள் எப்படி நடந்து கொள்வார்கள்” என்று கேட்டனர். அதற்கு அதுபற்றி எல்லாம் எங்களுக்கு தெரியாது என்று கிண்டலாக பதில் அளித்தபடி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் ரிசர்வ் வங்கி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது எழுந்து நிற்காமல், அவமதித்து,  கேள்வி கேட்ட நபர்களிடம் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வாக்குவாதம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதேநேரம் ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயலுக்கு பொதுமக்கள் கண்டனத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் என்ற அரசாணையை தெரிந்திருந்தும் அதை மதிக்காமல் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வேண்டுமென்றே அவமதிப்பு செய்யும் நோக்கத்துடன் கேள்வி கேட்டவர்களிடமே அரசாணை எங்கே, எங்களுக்கு அப்படி ஏதும் உத்தரவு வரவில்லை என்று பிடிவாதமாக வாதம் செய்துகொண்டே இருந்தது மிகவும கண்டிக்கத்தக்கது என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் செய்து வருகின்றனர். ரிசர்வ் வங்கி முற்றுகை:தமிழ்தாய் வாழ்த்து பாடப்படும்போது எழுந்து நிற்காமல் அவமதிப்பு செய்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள், ஊழியர்களின் அடாவடித் தனத்தைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் அதன் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை ரிசர்வ் வங்கி முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

Related Stories: