சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் குடியரசு தினவிழா ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார்

* ஹெலிகாப்டரில் இருந்து மலர்களை தூவி தேசிய கொடிக்கு மரியாதை

* டெல்லியில் மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு

சென்னை: நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று காலை 8 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றினார். தமிழகத்தில்  குடியரசு தின விழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மெரினா காமராஜர் சாலையில் நேற்று காலை நடந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 7.52 மணிக்கு வந்தார். அவரை மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வந்தனர். அவர் விழா மேடைக்கு வருகை தந்து அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார்.

தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 7.54 மணிக்கு கவச வாகனங்கள் புடைசூழ வருகை தந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். இதையடுத்து முப்படையின் மூத்த அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள்  அவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி வணக்கம் தெரிவித்தார். இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி அணிவகுப்பு மரியாதையை பெற்றுக் கொள்வதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு சென்றார். சரியாக 8 மணிக்கு அவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது நாட்டுப்பண் இசைக்கப்பட்டது.

அதே சமயத்தில் வானில் பறந்து வந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் இருந்து தேசியக் கொடி மீது மலர்கள் தூவப்பட்டன. அங்கிருந்தபடி அவர் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு வணக்கம் தெரிவித்து அதை ஏற்றுக் கொண்டார். முதலில் ராணுவத்தினர் மிடுக்காக அணிவகுத்து வந்தனர். அவர்களை தொடர்ந்து கடற்படை,  ராணுவ இசைக்குழு, விமானப்படை, கடலோர காவல்படையினர் அணிவகுத்தனர். அவர்களை தொடர்ந்து கடற்படை ஊர்தி, விமானப்படை ஊர்தி, கடலோர காவல்படை ஊர்தி அணிவகுத்து வந்தன. திருலோகநாதன் தலைமையில் முன்னாள் படை வீரர்கள் அணிவகுத்து வந்தனர். இவர்களை தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், மத்திய துணை நிலை ராணுவத்தினர், சி.ஆர்.பி.எப். இசைக்குழு, ரயில்வே பாதுகாப்பு படையினர் வந்தனர்.

இதையடுத்து தமிழக காவல் துறையினர் அணி வகுத்தனர். தமிழக பெண்கள் காவல் சிறப்பு படையினர், தமிழக ஆயுதப்படை இசைக் குழு, தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு, தமிழ்நாடு ஆண்கள் பிரிவு காவல்படை, தமிழ்நாடு கமாண்டே படை வீரர்கள் அடுத்தடுத்து அணி வகுத்து வந்தனர். அவர்களைத் தொடர்ந்து சிறைத்துறை, தமிழக தீயணைப்புத்துறை,  ஊர்க்காவல் படை, ஊர்க்காவல் படை பெண்கள் பிரிவு ஆகியோரும் அணி வகுத்து வந்தனர். 10 நிமிடங்களில் இந்த அணிவகுப்பு மரியாதை நடைபெற்று நிறைவு  பெற்றது. அணிவகுப்பு மரியாதை நிறைவு  பெற்றதும் கவர்னர் ஆர்.என்.ரவி மேடைக்கு சென்று அமர்ந்தார்.

அதே சமயத்தில்  மேடையில் அமர்ந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து வந்தார்.  தொடர்ந்து வீர-தீர செயல் புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வீர-தீர செயல் புரிந்தவர்களுக்கு அண்ணா பதங்கங்களை வழங்கி கவுரவித்தார். கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் கோவை மாவட்டத்தை சேர்ந்த முகமது ரபிக்கு வழங்கப்பட்டது. திருந்திய நெல்  சாகுபடிக்கான வேளாண்துறை சிறப்பு பதக்கம் செ.ராமசாமிக்கு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் அரசு துறைகளின் சாதனைகளை விளக்கும் வகையில் 25 துறைகள் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்புகள் நடைபெறுவது வழக்கம்.  இந்த ஆண்டு 3 அலங்கார ஊர்திகள் மட்டுமே இடம் பெற்றது. முதலாவதாக செய்தி மக்கள் தொடர்புத்துறை  சார்பில் மங்கள இசை ஊர்தியுடன் அணிவகுப்பு தொடங்கியது. டெல்லியில்  நடைபெற்ற குடியரசு தின விழாவில் அனுமதி மறுக்கப்பட்ட ஊர்தி, 3 வாகனங்களாக  பிரிக்கப்பட்டு அணிவகுப்பில் இடம்பெற செய்யப்பட்டது.

முதல் வாகனத்தில்  வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் பெண்கள், 2வது வாகனத்தில் மகாகவி  பாரதியார், வ.உ.சிதம்பரனார் சிறையில் செக்கிழுக்கும் காட்சி, 3வது ஊர்தியில் தந்தை பெரியார், ராஜாஜி, காமராஜர், முத்துராமலிங்க  தேவர், கக்கன், இரட்டைமலை சீனிவாசன், வாஞ்சிநாதன், தீரன்  சின்னமலை, திருப்பூர் குமரன், வ.வே.சு. ஐயர், காயிதேமில்லத், ஜே.சி.குமரப்பா உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் சிலைகள் இடம்  பெற்றது குறிப்பிடத்தக்கது. 8.20  மணிக்கு விழா நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நிறைவாக நாட்டுப்பண்  இசைக்கப்பட்டது. மாநில காவல்துறை கூட்டு இசைக்குழுவினர் தேசிய கீதத்தை  இசைத்தனர். அத்துடன் விழா முடிந்தது. சுமார் 30 நிமிடங்களுக்குள் குடியரசு தின விழா நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.

விழா முடிந்ததும்  கவர்னர் ஆர்.என்.ரவி வணக்கம் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்  மற்றும் அதிகாரிகளிடம் இருந்து விடைபெற்றார்.   குடியரசு தினவிழாவில் நீதிபதிகள், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் துரைமுருகன் உட்பட அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னையில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தையொட்டி நிகழ்ச்சி நடைபெறும் மெரினா காமராஜர் சாலையில் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு அப்பகுதியை போலீசார் தங்களது கட்டுப்பட்டில் கொண்டு வந்தனர். இதுதவிர கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து கப்பல்கள் மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை முழுவதும் 10 ஆயிரம் போலீசார் குடியரசு தின பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

* சிறந்த காவல் நிலைய விருது

சிறந்த காவல் நிலைய விருதுக்கான முதல் பரிசு திருப்பூர் தெற்கு நகர காவல் நிலையத்துக்கும், திருவண்ணாமலை, தாலுகா காவல் நிலையத்துக்கு 2ம் பரிசும், மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்துக்கு 3ம் பரிசும் வழங்கப்பட்டது. 5 பேருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதற்காக காவலர்கள் 5 பேருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது. அதன்படி சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி, வேலூரைச் சேர்ந்த மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் குமார், கள்ளக்குறிச்சி மாவட்டம் அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் சக்தி, திருச்சி மாவட்டம், காவல் உதவி ஆய்வாளர் சிதம்பரம், அயல் பணி நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் அசோக் பிரபாகரன் ஆகியோர் காந்தியடிகள் காவலர் பதக்கம் பெற்றனர். இவர்கள் 5 பேருக்கும் ரூ.40 ஆயிரத்துக்கான காசோலையை முதல்வர் வழங்கினார்.

* பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு

கொரோனா பரவல் காரணமாக கடற்கரையில் நடந்த குடியரசு தின விழாவுக்கு பொதுமக்கள் யாரும் நேரில் வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி பொதுமக்கள், பார்வையாளர்கள் கடற்கரைக்கு இன்று வரவில்லை.குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை தொலைக் காட்சி மூலம் மட்டுமே பொது மக்கள் கண்டுகளித்தனர். இதனால் குடியரசு தினவிழா மிக எளிமையாக குறுகிய நேரத்தில் நடைபெற்று முடிந்தது.

Related Stories: