10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் நேரடி வகுப்புகள்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

சென்னை: வரும் பிப்ரவரி மாதம் முதல் 10, 11 மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள பாரத சாரண சாரணியர்  இயக்கத்தின் சார்பில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. பாரத சாரண சாரணியர் இயக்க மாநில தலைவர் மற்றும் முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநர் மணி தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார், பாரத சாரண சாரணியர் இயக்க மாநில முதன்மை ஆணையர் இளங்கோ, தேசிய பொறுப்புக் குழு உறுப்பினர் அறிவொளி, மாநில ஆணையர் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் செயலாளர் கண்ணப்பன் முன்னிலை வகித்தனர். இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், 12 பேருக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார். மேலும், பாரத சாரண சாரணியர் இயக்கத்தில் 50 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றியவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளாக ந.முத்துக்கிருஷ்ணன், கே.அலமேலுக்கு வழங்கப்பட்டது.

பின்னர் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் தமிழகத்தின் நிலைப்பாடு. ஆனால் நீட் தேர்வை நியாயப்படுத்தும் வகையில் தான் தொடக்கத்தில் இருந்தே தமிழகத்தின்   ஆளுநர் பேசி வருகிறார். ஆனால் நீட் வரக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. நீட் தேர்வில்  இருந்து விலக்கு கேட்டு தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா, தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை  குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் கோரிக்கை. அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு பள்ளிக் கல்வித்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதை படிப்படியாக செய்வோம்.

தமிழகத்தில்  முன்னாள் முதல்வர் அண்ணா காலத்தில்  இருந்தே இருமொழிக் கொள்கை என்பதே அரசின் நிலைப்பாடாக உள்ளது. அப்படி இருக்க தமிழக ஆளுநர் தனது குடியரசு தின வாழ்த்துச் செய்தியில், தமிழகம் குறிப்பிட்டுள்ள இரண்டு மொழிகளை தாண்டி மூன்றாவதாக ஒரு மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். அது அவருடைய கருத்து. தமிழகத்தில் 10, பிளஸ் 1, பிளஸ் 2  தேர்வுகளை நடத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இந்த வகுப்புகளுக்கு பிப்ரவரி மாதம்  முதல் பள்ளிகள்  திறக்க முதல்வரிடம் பரிந்துரை  செய்துள்ளோம். அதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.  

மேற்கண்ட வகுப்புகளுக்கு  பொதுத் தேர்வு நடத்துவதற்கு முன்பாக, 2 திருப்புதல் தேர்வுகளை நடத்த திட்டமிட்டு இருந்தோம். தற்போது பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஒரு திருப்புதல் தேர்வு மட்டுமே நடத்தப்படும். பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு கேள்வித்தாள் வடிவமைப்பில் எந்த மாற்றமும்  இருக்காது. இதற்கு முன்பு பொதுத் தேர்வுகளில் கேள்வித்தாள் எப்படி வழங்கப்பட்டதோ அப்படியே இந்த ஆண்டும் கேள்வித்தாள்  வழங்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும். அரசுப் பள்ளிகளில் 3330 பழுதடைந்த கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு கேள்வித்தாள் வடிவமைப்பில் எந்த மாற்றமும்  இருக்காது.

Related Stories: