வள்ளுவர் கோட்டத்தில் கொரோனா விதிமுறை மீறல் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்பட 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு: நுங்கம்பாக்கம் போலீசார் நடவடிக்கை

சென்னை: வள்ளுவர் கோட்டத்தில் போலீசாரின் தடையை மீறி மாணவி லாவண்யா மரணம் குறித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் உட்பட 200க்கும் மேற்பட்டோர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று காரணமாக பொது இடங்களில் மற்றும் அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டங்கள், உண்ணாவிரதம், பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த கூடாது சென்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தடை விதித்துள்ளார். தடையை மீறி போராட்டம், உண்ணாவிரதம் நடத்தினால் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த தடை உத்தரவை மீறி பாஜ சார்பில் நேற்று முன்தினம் வள்ளுவர் கோட்டம் அருகே தஞ்சையில் பள்ளி மாணவி லாவண்யா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் போராட்டம் நடத்தப்பட்டது. தடையை மீறி நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பாஜ மாநில தலைவர் கே.அண்ணாமலை, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, துணைத்தலைவர்கள் எம்.என்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், வி.பி.துரைசாமி, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், இளைஞர் அணி மாநில தலைவர் வினோஜ் பி.செல்வம், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் என 150 பெண்கள் உட்பட 500 பேர் கலந்துகொண்டனர். போலீசாரின் தடையை மீறி உண்ணாவிரதம் போராட்டம் நடந்ததால் நுங்கம்பாக்கம் போலீசார் ஐபிசி 143, 269, 270 மற்றும் சிட்டி போலீஸ் அக்ட் 41 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்ட 16 நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: