கடந்த அதிமுக ஆட்சி காலம் முடியும் தருவாயில் நீர்வளப்பிரிவுக்கு ரூ.14 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து அவசர டெண்டர்: பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை: கடந்த அதிமுக ஆட்சி காலம் முடியும் தருவாயில் நீர்வளப்பிரிவுக்கு மட்டும் ரூ.14 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து அவசர அவசரமாக டெண்டர் விடப்பட்ட பரபரப்பு தகவல் அம்பலமாகியுள்ளது. தமிழகத்தில் நீர்வளத்துறை மூலம் ஏரிகள், அணைகள் புனரமைத்தல், புதிதாக தடுப்பணை, கதவணை அமைப்பது, நிலத்தடி நீர் செறிவூட்டும் பணிகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.4 ஆயிரம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். இந்த நிதியை கொண்டு ஒப்பந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகளை பொறுத்து குறைந்த பட்சம் 3 மாதம் வரை அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை ஆகும். இந்நிலையில், கடந்தாண்டில் மட்டும் அதிமுக ஆட்சிக்காலம் முடியும் தருவாய் என்பதால், பொதுப்பணித்துறையின் நீர்வளப்பிரிவுக்கு மட்டுமே அதிகபட்சமாக ரூ.14 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, காவிரி பாசன கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக நபார்டு வங்கியின் நிதியுதவி மூலம் ரூ.3384 கோடி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதில், கடந்த ஜனவரி மாதம் முதற்கட்டமாக ரூ.224 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று, கரூர் மாயனூரில் உள்ள கட்டளை கதவணையை புனரமைக்க ரூ.172 கோடியும், ரூ.41 ேகாடியில் விடூர் அணை புனரமைப்பு பணி, ரூ.421 கோடியில் பெண்ணையாற்றில் புதிய கால்வாய், சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் ரூ.55 கோடியும், கூவம் ஆற்றின் குறுக்கே கொரட்டூர் தடுப்பணை கட்ட ரூ.32 கோடி, சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளுக்கு ரூ.238 கோடியும், நீர்வளநிலவள திட்டத்தின் கீழ் ரூ.649 கோடியில் 906 ஏரி, 181 அணைகட்டுகள், ரூ.60 கோடியில் கொளவாய் ஏரி புனரமைப்பு, ரூ.120 கோடி மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்தி கொள்ளளவை மேம்படுத்தும் திட்டம், ரூ.60 கோடியில் ஒரத்தூர் தடுப்பணை திட்டம், ரூ.58 கோடியில் காட்டூர் மற்றும் தட்டமஞ்சி ஆகிய இரட்டை ஏரிகள் இணைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்லணை கால்வாய், அத்திக்கடவு-அவினாசி திட்டம், காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டபணிகள் உட்பட 132 பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டு தற்போது பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டப்பணிகளில் அனைத்தும் அவசரம் அவசரமாக டெண்டர் விடப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 3 ஆண்டுகள் ஒதுக்க வேண்டிய நிதியை அதிமுக ஆட்சி காலம் முடியும் தருவாயில் அவசரஅவசரமாக நிதி ஒதுக்கீடு செய்து விட்டதால், நடப்பாண்டில் நீர்வளத்துறை சார்பில் முக்கிய திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நிதித்துறை விளக்கம் அளித்துள்ளது.

ஆனால், இந்த திட்டம் எல்லாம் தற்போது அவசியம் தானா என்று ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பெரும்பாலான பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இப்பணிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. ஆனால், இப்பணிகளில் தொடக்க நிலையில் உள்ள பணிகள் ஆராயப்படவுள்ளது. அதே நேரத்தில் நபார்டு, உலக வங்கி மூலம் நடக்கும் பணிகளுக்கு மட்டுமே உடனடியாக நிதி ஒதுக்க நிதித்துறை முன்வந்துள்ளது. இந்த சூழலில் திமுக அறிக்கையில் வெளியிடப்பட்ட வாக்குறுதியின் பேரில், இந்தாண்டு நீர்வளத்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ரூ.12,600 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கான அறிக்கைக்கு அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இப்பணிகளை முக்கிய திட்டப்பணிகளை தொடங்கினால் மட்டுமே வருங்காலங்களில் மழைநீரை சேமித்து வைக்க முடியும் என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நபார்டு, உலக வங்கி மூலம் நடக்கும் பணிகளுக்கு மட்டுமே உடனடியாக நிதி ஒதுக்க நிதித்துறை முன்வந்துள்ளது.

Related Stories: