இலங்கை சிறையிலிருந்த 56 தமிழக மீனவர்கள் விடுதலை படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தல்

ராமநாதபுரம்: இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 56 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். பறிமுதல் செய்த படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்தாண்டு டிச.18ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து சென்ற 43 மீனவர்கள், டிச.20ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தில் இருந்து சென்ற 13 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட இவர்களுக்கு தொடர்ந்து காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்த படகுகளை விடுவிடுக்க கோரி ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம் மீனவர் நல சங்க பிரதிநிதிகள், காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினும் மீனவர்களை விடுவிக்கக் கோரி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் தொடர்பு கொண்டு வலியுறுத்தினார்.

இதுதொடர்பான வழக்கு நேற்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் மீனவர்கள் 56 பேரையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும், மீனவர்களை சிறை பிடித்தபோது பறிமுதல் செய்த 8 விசைப்படகுகள் தொடர்பான வழக்கு வரும் ஏப்.1ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது படகின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஐராக நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 56 பேரும் கொழும்புவில் உள்ள மெருஹானா முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்கள் விடுதலையால் ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர். மீனவர்களோடு படகுகளையும் விடுவிக்க வேண்டும், படகுகள் ஏலம் விடுவதை இலங்கை அரசு கைவிட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: