தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை விதிக்க முடியாது!: சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..!!

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் தங்களால் உத்தரவு பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையே, கொரோனா தொற்று தற்போது உச்சத்தில் இருப்பதால் தேர்தலை நடத்தினால் தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்குமாறும் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் நக்கீரன் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த 2 நாட்களாக உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில் நடைபெற்று வந்தது. அப்போது தற்போதைய நிலையில் தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும் என்றும் 17 சதவீதம் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் ஐ.சி.யூ. அனுமதி அதிகரிக்கிறது என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாநிலத்தில் உள்ள நிலைமையை பொறுத்து தேர்தல் தொடர்பான வழக்கை விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் 2021ல் அனுமதி அளித்ததையும் மனுதாரர்கள் சுட்டிக் காட்டியிருந்தார்கள்.

கடந்த விசாரணையின் போது மாநில தேர்தல் ஆணையமானது, உச்சநீதிமன்றத்தில் 4 மாதத்தில் தேர்தல் அறிவிப்பினை வெளியிடுவதாக உத்தரவாதம் அளித்திருப்பதாகவும் அந்த காலக்கெடு வரும் ஜன.27-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள், விதிமுறைகள், நகர்ப்புற தேர்தலில் கடைபிடிக்கப்படும் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வழக்கு மீதான விசாரணை இன்றும் தொடர்ந்தது. அப்போது, தேர்தல் நடத்துவதில் உள்ள தாமதத்தை கருத்தில் கொண்டுதான் உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.  கொரோனா பேரிடர் ஒரு காரணமாக முன்வைக்கப்படவில்லை.

உச்சநீதிமன்றம் தேர்தல் அறிவிப்பிற்கு கெடு விதித்துள்ளதால் அதை எதிர்த்து தீர்ப்பு வழங்க முடியாது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை தான் அணுக வேண்டும். தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தை அணுகவில்லை. நாங்கள் வழக்கை முடித்து வைக்காமல் நிலுவையில் வைத்திருப்போம்; கொரோனா விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என கண்காணிப்போம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொரோனா கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் மனுதாரர்கள் நீதிமன்றத்தை அணுகலாம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 10 தினங்கள் கழித்து மீண்டும் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மாநில அரசும், தேர்தல் ஆணையமும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், கொரோனாவை காரணம் காட்டாமல் தேர்தலை நடத்த வேண்டும் என்கிற தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: