நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு இது 126வது பிறந்தநாளா 125வது பிறந்தநாளா? ஒன்றிய அரசின் அறிவிப்பால் எழுந்தது சர்ச்சை

சென்னை: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்க்கு இது 126 பிறந்தநாளா அல்லது 125 பிறந்தநாளா என்ற விவாதம் தற்போது அனல் பறக்க தொடங்கியுள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் விளம்பரங்கள் பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பிறந்தநாள் அன்று தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் நேதாஜியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் நேதாஜியின் 126வதுபிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் அமைச்சர், அதிகாரிகள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் நேதாஜியின் பிறந்தநாள் ஜனவரி 23ம் தேதியில் இருந்து தொடங்கும் என்றும், நேதாஜியின் 125வது பிறந்தநாளையொட்டி ஒட்டு மொத்த தேசமும் கொண்டாடும் என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். நேதாஜியின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பிரதமருக்கு அனைவரின் சார்பிலும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையும் அறிக்கை வெளியிட்டிருந்தார். தமிழக அரசு சார்பில் 126வது பிறந்நாள் விழா கொண்டாட்டம் என்று விளம்பரம் வந்துள்ளது. ஆனால், திடீரென ஒன்றிய பாஜ அரசு 125வது பிறந்தநாள் கொண்டாட்டம் என்று அறிவித்துள்ளது.

இதில் எது அவரின் உண்மையான பிறந்த நாள் என்ற விவாதம் தற்போது அனல் பறக்க தொடங்கியுள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் சார்பில் பிறந்தநாள் தொடர்பாக யார் ஆட்சிக்கு வந்தாலும் பத்திரிகைகளில் காலம்காலமாக வந்துள்ளது. அதில் யாரும் இதுவரை ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஆனால், இந்தாண்டு தான் ஒன்றிய அரசு நேதாஜியின் பிறந்தநாளை ஒட்டு மொத்த தேசமும் கொண்டாடும் என்று அறிவித்துள்ளது. 126வது பிறந்தநாள் என்று தமிழக அரசு கொண்டாடுகிறது. அப்படியிருக்கும் போது ஒன்றிய அரசு பிறந்த ஆண்டை குறைத்து 125வது பிறந்தநாள் என்று அறிவித்தது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. 125வது ஆண்டை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற காரணத்திற்காக அவ்வாறு அறிவித்ததா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏன் ஒரு ஆண்டை குறைத்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கேள்வி தற்போது எழுந்துள்ளது.

2019ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 123வது பிறந்த நாளை கொண்டாடினர். அப்போது அமைச்சர்களாக இருந்த ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, பாண்டியராஜன், பெஞ்ஜமின் ஆகியோர் மாலை அணிவித்தனர். 2020ம் ஆண்டு அதே அமைச்சர்கள் 124வது பிறந்த நாளை கொண்டாடினர். கடந்த ஆண்டு தமிழக அரசு 125வது பிறந்த நாளை கொண்டாடியது. இந்த ஆண்டு 126வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசு ஏன் இந்த ஆண்டு 125வது பிறந்தநாளை கொண்டாடினர் என்ற சந்தேகம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் நேதாஜி இறந்தது தான் இது வரை மர்மமாக இருந்து வருகிறது. தற்போது அவரின் பிறந்தநாளையும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: