கோவா தேர்தல் களத்தில் காங். கட்சியை வேட்டையாடிய திரிணாமுல்: கூட்டணி விவகாரத்தில் ப.சிதம்பரம் கடுப்பு

புதுடெல்லி: கோவா தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சியை திரிணாமுல் கட்சி வேட்டையாடியதாகவும், இருகட்சிகளுடனான கூட்டணி விவகாரம் குறித்தும் ப.சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கோவாவில் கடந்த முறை நடந்த தேர்தலில் ெபரும்பான்மை பலம் பெற்ற காங்கிரஸ், அம்மாநிலத்தில் ஆட்சியமைக்க முடியாமல் போனது. குறுக்கு வழியை கையாண்டு ஆட்சியை பிடித்த பாஜக, தற்போது பேரவை தேர்தலை எதிர்கொண்டுள்ளது. ஆனால் கோவாவில் மீதமுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் பலர் பாஜக, மம்தாவின் திரிணாமுல், கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி போன்ற கட்சிகளுக்கு தாவி விட்டதால், அம்மாநில காங்கிரசின் நிலைமை பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவா மாநில தேர்தல் பொறுப்பாளராக காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரம் செயல்பட்டு வருகிறார். காங்கிரசுடன் கூட்டணி அமைத்து கோவாவில் தேர்தலை எதிர்கொள்ள திரிணாமுல் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதற்கு ப.சிதம்பரம் முட்டுக்கட்டை போட்டதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி பகிரங்கரமாக குற்றம்சாட்டினார். இவ்விவகாரம் அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ப.சிதம்பரம் அளித்த பேட்டியில், ‘கோவாவில் காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்எல்ஏ லூயிசின்ஹோ ஃபலேரோ தொடங்கி பல காங்கிரஸ் தலைவர்களை திரிணாமுல் காங்கிரஸ் வேட்டையாடியுள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் கட்சி தனது முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. இந்த பட்டியல் வெளியிட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு, மூத்த தலைவர் அலெக்சோ ரெஜினால்டோ லோரன்கோவை திரிணாமுல் கட்சி வேட்டையாடியது. கடந்த டிசம்பர் 24ம் தேதி திரிணாமுல் கட்சியுடனான கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகும், எங்களது கட்சி எம்எல்ஏக்களை வளைத்து போட்டனர். இந்த உண்மைகள் அனைத்தும் காங்கிரஸ் தலைமைக்கு தெரியும். மேலும் திரிணாமுல் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த கட்சி தலைமையிடம் இருந்து எனக்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை’ என்றார்.

Related Stories: