உளுந்தூர்பேட்டையில் பரிதாபம் பாலம் வேலை செய்து வந்த பள்ளத்தில் விழுந்து மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை :  செங்கல்பட்டு மாவட்டம் திருத்தேரி பகுதியை சேர்ந்தவர் பிரகாசம் மகன் தாஸ் (52). இவர் அந்த பகுதியில் மின்வாரிய ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று இவர், இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டிலிருந்து விருத்தாசலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்றிரவு உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலை அகலப்படுத்தும் பணிக்காக போடப்பட்டிருந்த தரைப்பாலத்தில் போதிய விழிப்புணர்வு பலகைகள் வைக்காமல் இருண்ட நிலையில் இருந்த அந்த தரைப்பாலத்தின் பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாஸ் நிலைத்தடுமாறி விழுந்தார். அப்போது அங்கிருந்த கம்பி தலை மற்றும் உடலில் சொருகியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் அருட்செல்வம் மற்றும் போலீசார், உயிரிழந்த தாஸின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தரைப்பாலம் வேலை நடைபெற்ற இடத்தில் போதிய விழிப்புணர்வு பலகைகள் வைக்காததால் மின்வாரிய ஊழியர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: