9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை; ஒன்றிய அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்குவதற்கான தேர்வு மார்ச் மாதம் நடைபெறும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தின்படி 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகள் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வுக்கு 7-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

இதற்கான தேர்வு மார்ச் மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் வெற்றிபெறும் மாணவ- மாணவிகளுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 உதவித்தொகை கிடைக்கும். இந்த தேர்விற்கான விண்ணப்பங்களை 12-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை //www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணத்தொகை ரூ.50-ஐ சேர்த்து தாங்கள் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வருகிற 27-ந்தேதி சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்து அரசு தேர்வுத் துறை இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘2021-22-ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற அரசு, அரசு உதவிபெறும், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

மேலும் விவரங்களை அரசு தேர்வுத்துறை இணைய தளத்தில் அறியலாம். இந்த கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க பள்ளிக்கு வரும் போது முககவசம் அணிந்து வர வேண்டும். மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 40 லட்சம் மாணவர்கள் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். அவர்களில் தேர்வில் வெற்றி பெறுகிறவர்களுக்குத்தான் உதவித் தொகை வழங்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: