ஒகேனக்கல் 2வது கூட்டுக்குடிநீர் திட்டம் அதிமுக துணை நிற்கும்: ஓபிஎஸ் அறிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: 1986ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1994ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ரூ.350 கோடியில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டும் போதிய நிதியுதவி கிடைக்காததன் காரணமாக அந்தத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. தமிழ்நாட்டில் எந்தத் திட்டத்தை அறிவித்தாலும் அதனை எதிர்ப்பது என்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது கர்நாடக அரசு. அந்த வகையில் தற்போது தனது எதிர்ப்பினை கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.  கர்நாடக அரசின் இந்த எதிர்ப்புக்கு அதிமுக சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவேரி நதிநீர் பங்கீட்டில், தமிழ்நாடு கீழ்ப்பகுதி மாநிலம். சட்டப்படி தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய நீரைக் கூட திறந்துவிட மறுப்பதையும், கர்நாடகாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பிய பிறகு உபரி நீரை திறந்துவிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்ற கர்நாடக அரசுக்கு தமிழ்நாட்டிற்குள் மேற்கொள்ளவிருக்கும்  ஒகேனக்கல் 2வது கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தடுத்து நிறுத்த தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உரிமை இல்லை. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய அனைத்து உரிமைகளும் தமிழ்நாட்டிற்கு உண்டு. இதனை இந்த அரசு நிச்சயம் நிறைவேற்ற வேண்டும். இதற்கு அதிமுக தனது முழு ஆதரவினை நல்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: