இன்று முழு ஊரடங்கு எதிரொலி; சென்னையில் விமானங்கள், பயணிகள் எண்ணிக்கை பாதியாக குறைந்தது

மீனம்பாக்கம்: இன்று முழு ஊரடங்கு எதிரொலியாக சென்னையில் விமானங்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் பெரும்பாலான பயணிகள் போக்குவரத்தை தவிர்த்தனர். அத்தியாவசிய பணிகளுக்கான போக்குவரத்து மட்டும் இருந்தது. சென்னை விமான நிலையத்தில் கொரோனா தொற்றின் 3வது அலைக்கு முன்பு வரை தினமும் சுமார் 280 விமானங்கள் இயக்கப்பட்டது. 36 ஆயிரம் வரையில் பயணிகள் பயணித்தனர்.

தற்போது தொற்றின் 3வது அலை அதிகரித்து வருவதால் உள்நாட்டு விமானங்கள் எண்ணிக்கை குறைந்தது. இதனால் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்தது. இன்று உள்நாட்டு விமானங்களில் புறப்பாடு 81, வருகை 81 என மொத்தம் 162 விமானங்கள் மட்டும் இன்று இயக்கப்படுகிறது. பயணிகள் எண்ணிக்கையில் புறப்பாடு 6 ஆயிரம், வருகை 6 ஆயிரம் என மொத்தம் 12 ஆயிரம் பேர் பயணிக்கின்றனர். தூத்துக்குடிக்கு காலை 12.20 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் 9 பேர், திருச்சிக்கு 10 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் 14 பேர், மதுரைக்கு 10.05 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் 12 பேர், கோழிக்கோடுக்கு பகல் 2.35 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் 2 பேர் மட்டும் பயணித்தனர்.

இன்று மாலை 6.20 மணிக்கு மைசூருக்கு செல்லும் விமானத்தில் 13 பேர், மாலை 7.05 மணிக்கு கோவைக்கு புறப்படும் விமானத்தில் 117 பேர் செல்கின்றனர். டெல்லி, மும்பை, கொல்லகத்தா, ஐதராபாத் செல்லும் விமானங்களில் 150 பேர் வரையில் பயணிக்க உள்ளனர். வழக்கமாக ஊரடங்கு தினத்தில் டாக்சி, ஆட்டோ கிடைக்காமல் விமான பயணிகள் அவதிப்பட்டனர். அப்படியே அனுமதி பெற்று வந்தாலும் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. அதை போக்கும் வகையில், சென்னை விமான நிலையத்தில் 500க்கும் மேற்பட்ட பிரிபெய்ட் டாக்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயணிகள், விமான நிலையத்திலேயே டிக்கெட்டை காட்டி, அங்கேயே முன்பதிவு செய்து டாக்சியில் பயணித்தனர். இதனால் பெரும்பாலான பயணிகள் நிம்மதியடைந்தனர்.

Related Stories: