தமிழகத்தில் இயல்பை விட 59% கூடுதல் மழை பதிவு வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்தது

* அதிகபட்சம் விழுப்புரம்

* குறைந்தபட்சம் ராமநாதபுரம்

சென்னை: தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை நேற்றுடன் முடிவுக்கு வந்தது.தமிழகத்தில் 2021ம் ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை தாமதமாக அக்டோபர் 25ம் தேதி தொடங்கியது. சென்னை, கன்னியாகுமரி, திருப்பத்தூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து டிசம்பர் மாதம் இறுதியில் மழையின் அளவு குறைந்தது. சென்னையை பொறுத்தவரை பொங்கல் நேரத்தில் மட்டும் மழை பெய்தது. அதன் பிறகு மழையின் அளவு குறைந்து வெயில் அடிக்க தொடங்கியது. இந்நிலையில் 2021ம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை நேற்றுடன் நிறைவு பெற்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த காலக்கட்டத்தில் (டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி) தமிழகத்தில் இயல்பை விட 59 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது. வடகிழக்கு பருவமழையின் இயல்பான அளவு 449.7 மி.மீ. தான். ஆனால், தற்போது வரை 714.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் இயல்பை விட 119 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது. சென்னையில் 74 சதவீதமும் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது. குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் இயல்பை விட 13 சதவீதம்அதிகமாக மழை பதிவாகியுள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை மையம் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை இன்று (நேற்றுடன்) தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராமசீலா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து விலகியது. இன்று முதல் 26ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: