21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சி பதவி நகர்ப்புற உள்ளாட்சிக்கு நாளை தேர்தல் தேதி அறிவிப்பு?

* பிரசாரத்துக்கு கடும் கட்டுப்பாடு

* டெபாசிட் தொதாகை 2 மடங்காக உயர்வு

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தும் தேதி நாளை அறிவிக்கப்படுகிறது. தமிழகத்தில், கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 கட்டங்களாக 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதில், பெரும்பான்மையான இடங்களை திமுக கைப்பற்றியது. இந்நிலையில், ஜனவரி 31ம் தேதிக்குள் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொதுத் தேர்தல்களை நடத்தும் பணியை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது.

இறுதியாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை சுமூகமாக நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் கடந்த புதன்கிழமை ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் 24ம் தேதி(நாளை) தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் அன்றைய தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் வருகிறது. நீதிமன்றம் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அதே நேரம் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால், இப்போதைக்கு தேர்தல் நடத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ெதாடரப்பட்டுள்ளது. இந்த வழக்கும் 24ம் தேதி(நாளை) வருகிறது. இதில் வழங்கப்படும் தீர்ப்பை பொறுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும். அனேகமாக பிப்ரவரி மாதத்தில் 2 வாரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

இந்த நிலையில் தேர்தலுக்கான வேட்பாளர் கையேட்டை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விவரங்களின்படி, இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு டெபாசிட் தொகை ₹2000ல் இருந்து ₹4 ஆயிரமாகவும், நகராட்சி உறுப்பினர் பதவிக்கு ஆயிரத்தில் இருந்து ₹2 ஆயிரமாகவும், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு ₹500ல் இருந்து ₹1,000 ஆக டெபாசிட் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு எஸ்சி, எஸ்டி பிரிவினர் போட்டியிட்டால் இந்த தொகையில் பாதி செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வேட்பாளர் பெயரிலோ, கட்சிகள் பெயரிலோ மற்றும் அதுதொடர்பான வாசகங்கள் அச்சிடப்பட்ட எவ்விதமான விளம்பர சுவரொட்டிகளோ, டிஜிட்டல் பேனர்களோ, கட்அவுட்களோ, சுவரில் எழுதப்பட்டோ மாநிலத்தின் எந்த இடத்திலும் இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்துவது தொடர்பாக கடும் கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள் மற்றும் அவரது முகவர்கள் கைபேசி பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது கொரோனா காலமாக இருப்பதால் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்திற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. தேர்தல் பிரசாரத்திற்கு என்னென்ன கட்டுப்பாடுகள் என்பது தொடர்பாக தேர்தல் அறிவிப்பு வெளியாகும் அன்று விரிவான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories: