குமரி அருகே நகைக்கு ஆசைப்பட்டு 4 வயது சிறுவனை கொன்று உடலை பீரோவில் மறைத்த பெண்: நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்

குளச்சல்: நகைக்கு ஆசைப்பட்டு 4 வயது சிறுவனை கொன்று உடலை பீரோவுக்குள் மறைத்து வைத்த பெண் கைது செய்யப்பட்டார். குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் பாத்திமா தெருவை சேர்ந்தவர் ஜான் ரிச்சர்டு. சவுதி அரேபியாவில் மீன் பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சகாய சில்ஜா. இவர்களுக்கு ஜோகன் ரிஜி (4) என்ற மகனும், 2 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். நேற்று முன்தினம் ஜோகன் ரிஜி, அதே தெருவில் உள்ள குமார் என்பவரின் வீட்டு முன், மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். மதியம் 1.30 மணியளவில் சாப்பாடு ெகாடுப்பதற்காக சகாய சில்ஜா,  மகனை தேடிய போது அவனை காணவில்லை. அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகள், உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும் தகவல் எதுவும் இல்லை. இதையடுத்து, மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சிறுவன் ஜோகன் ரிஜி 1 பவுன் தங்க செயினும், அரை பவுன் பிரேஸ்லெட் மற்றும் வெள்ளி அரைஞான் கயிறும் அணிந்திருந்தான். எனவே நகைக்கு ஆசைப்பட்டு கடத்தி இருக்கலாமா? என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது அதே தெருவில் வசிக்கும் ஷரோபின் என்பவரது மனைவி பாத்திமா (35) வீட்டுக்கு போலீசார் சென்றபோது அவர் இல்லை. குழந்தைகள், அம்மா நகை அடகு வைக்க பேங்க்கிற்கு சென்றுள்ளதாக கூறினர். அவர் மீது சந்தேகம் இருப்பதாக ஊர் ெபாதுமக்கள் கூறியதால் அந்த வங்கிக்கு தனிப்படை போலீசார் சென்றனர். அங்கு அவர் அடகு வைத்த நகையை பார்த்த போது, அது சிறுவன் அணிந்திருந்த நகை என தெரிய வந்தது.

இதனால் பாத்திமாவை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர், நகைக்கு ஆசைப்பட்டு ஜோகன் ரிஜியை கழுத்தை நெரித்து கொன்று பீரோவில் மறைத்து வைத்திருப்பதாக கூறினார். உடனடியாக வீட்டுக்கு வந்து பீரோவை திறந்து பார்த்த போது சிறுவன் ஜோகன் ரிஜி உடல் இருந்தது. தகவல் பரவியதும் ஊர்மக்கள் திரண்டு பாத்திமா வீட்டுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். பின்னர் பாத்திமாவை, குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.

கடலில் உடலை வீச திட்டம்

பாத்திமாவிடம் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் சிறுவன் ஜோகன் ரிஜி மற்ற குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தான். தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை. அவனை அழைத்து கொஞ்சுவது போல் வீட்டுக்குள் தூக்கி சென்ற பாத்திமா, நகையை கழற்றுமாறு கூறி உள்ளார்.

ஆனால் சிறுவன் மறுத்து அழ தொடங்கவே கழுத்தை நெரித்துள்ளார். இதில் சிறுவன் இறந்து விட்டான். பின்னர் நகைகளை கழற்றி விட்டு உடலை பீரோவுக்குள் மறைத்து வைத்துள்ளார். இரவில் யாருக்கும் தெரியாமல் உடலை கடலில் வீசி விட திட்டமிட்டுள்ளார். சிறுவனின் உறவினர்கள்,  பொதுமக்கள் சிலர் கடற்கரை பகுதிகளில் இருந்ததால், அவரால் உடலை  கடற்கரைக்கு கொண்டு செல்ல முடியவில்லை என தெரிய வந்தது.

Related Stories: