சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய பூங்காக்கள் அமைத்தல் மற்றும் பூங்காக்களை மேம்படுத்த ரூ. 24.43 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு  உட்பட்ட பகுதிகளில்  புதிய பூங்காக்கள் அமைத்தல் மற்றும் பூங்காக்களை மேம்படுத்த  சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில்  28  பணிகளுக்கு  ரூ. 24.43  கோடி  ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி, பூங்காத்துறையின் சார்பில் மாநகரில் சுற்றுச்சூழலை பேணிகாக்கவும், பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காகவும், 718 பூங்காக்கள்  அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 547 பூங்காக்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசமும், 111 பூங்காக்கள் தத்தெடுப்பு முறையில் தனியார் வசமும்,  ஒப்படைக்கப்பட்டுள்ளன.  மீதமுள்ள பூங்காக்கள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.   2021-22ம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவையில் திருத்திய நிதிநிலை அறிக்கையின் விவாதத்தின் போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய பூங்காக்கள் அமைக்கப்படும் ஏற்கனவே உள்ள பூங்காக்கள் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும் எனவும்  அறிவித்தார்கள்.

அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய பூங்காக்கள் அமைத்தல் மற்றும் பூங்காக்களை மேம்படுத்த  சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில்  28  பணிகளுக்கு அரசின்  நிர்வாக அனுமதி பெறப்பட்டு,  ரூ. 24.43  கோடி  ஒதுக்கீடு செய்து  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 23 பூங்காக்கள் ரூ. 18.48 கோடி மதிப்பில் புதியதாக அமைக்கப்பட உள்ளன.  5 பூங்காக்கள் ரூ.5.95 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளன.  இந்த பூங்காக்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபாதை, குழந்தைகள் விளையாட்டு பகுதி, திறந்த வெளியில் உடற்பயிற்சி கருவிகள், சுற்றுச் சுவர், சுவர்களில் வண்ணமயமான ஓவியங்கள், புல் தரைகள், பாரம்பரிய மர வகைகள், பொதுமக்களுக்கான கழிவறை மற்றும் குடிநீர் வசதி, மின்விளக்குகள் பொதுமக்களுக்கான கழிவறை மற்றும் குடிநீர் வசதி, மின்விளக்குகள் உட்பட பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.  இந்த 28 பூங்கா திட்டப் பணிகளுக்கான ஒப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஒப்பம் இறுதி செய்யப்பட்ட பிறகு பணியாணை வழங்கப்பட்டு  பணிகள்  விரைவில் தொடங்கப்படும் என அரசு முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

Related Stories: